ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து திருச்சி மஞ்சத்திடல் ரயில்வே நிலையத்தை ஒட்டியுள்ள விவேகானந்தா நகர் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் 322-ம் ரயில்வே சுரங்கப்பாதை பணியை விரைந்து முடித்திட கோரியும், பொன்மலை ஊரகப் பகுதிகளுக்குள் உள்ள தார் சாலைகளை செப்பனிடக் கோரியும், மகாலட்சுமி நகர் முதல் நாகம்மை வீதி வழியாக கம்பி கேட் வரையுள்ள மாநில நெடுஞ்சாலைக்கு சொந்தமான சாலையை செப்பனிடக்கோரியும் சமூக நல அமைப்புகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருச்சி மாநகர நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று மேல கல்கண்டார் கோட்டை பழைய பஞ்சாயத்து அலுவலகம் அருகே நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பா.லெனின் தலைமை தாங்கினார்.
ஒருகிணைப்பாளர் சக்திவேல், கோட்ட பொறுப்பாளர்கள் துரைக்கண்ணு, மோகன் உள்ளிட்டோர் முன்னிலையில் மற்ற நல சங்கங்களின் நிர்வாகிகள் மகேந்திரன்,செல்வராஜன், சேதுராம், எமன் குட்டி, வியாபாரிகள் சங்க தலைவர் தர்மராஜ், விவசாயிகள் சங்க செயலாளர் கார்த்திகேயன் மற்றும் விவேகானந்தா நகர், நாகம்மை வீதி குடியிருப்போர் நல சங்கம்,மகாலட்சுமி நகர் விஸ்தரிப்பு நல சங்கம், மூகாம்பிகை நகர் நல சங்கம், எஸ்.ஆர்.எம் அவன்யூ நல சங்கம், மீனாட்சி நகர் நல சங்கம், காருண்யா நகர் நல சங்கம் உள்ளிட்ட சங்கங்களின் நிர்வாகிகள் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர். ஒரு மாத காலத்திற்குள் பணி நிறைவு பெறவில்லையெனில் அடுத்து ரயில் மறியல் போராட்டம் நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது.