திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இருவரிடையே கைகலப்பு.. போலீசார் தடியடி
திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரருக்கும், காளையின் உரிமையாளருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ளது பெரிய சூரியூர் கிராமம். இங்கு நற்கடல் குடிகருப்பண்ண சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அந்தவகையில் இன்று (ஜனவரி 16) மாட்டுப் பொங்கலையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட் ஆட்சியர் பிரதீப் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
Advertisment
திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 700க்கும் மேற்பட்ட காளைகளும் 400க்கும் மேற்பட்ட மாடு வீரர்களும் போட்டியில் பங்கேற்றனர். சிறப்பாக காளைகளை தழுவும் வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. சிறந்த வீரருக்கு முதல் பரிசாக பைக் வழங்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்று போட்டி காலை 8 மணிக்கு துவங்கி 9 மணி அளவில் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து 2-வது சுற்றி போட்டி தொடங்கியது. அப்போது ஒரு சிறிய காளை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. அந்த காளையை 5-க்கும் மேற்பட்ட வீரர்கள் பிடித்தனர். அப்போது அந்த காளை சிறிய காளை என்றும் ஒரு வீரர் மட்டுமே பிடிக்க வேண்டும் என்றும் போட்டி ஏற்பாட்டாளர்கள் மைக்கில் அறிவித்தனர்.
அந்த காளையின் உரிமையாளரும் மைதானத்தில் வந்து ஒருவர் மட்டும் பிடிக்க வேண்டும் என்றார். அப்போது கோபடைந்த வீரர் ஒருவருக்கும், உரிமையாளருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அங்கு வந்த லேசான தடியடி நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல், காளைகள் கொண்டு வந்து நிறுத்தும் இடத்திலும் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை காண சுற்றிவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அந்த தொகுதியைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதுவரை வரவில்லை என்பதும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அவரது காளையுடன் ஜல்லிக்கட்டு களத்திற்கு வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.