திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தமிழர் திருளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் தை 2 ஆம் தேதி மாட்டுப் பொங்கல் அன்று சூரியூர் ஸ்ரீநற்கடல்குடி கருப்பணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி இன்று நடைபெற்ற பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு 800 காளைகளும் 500 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்த நிலையில், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 681 ஜல்லிக்கட்டு காளைகளும், 349 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். திருச்சி ஆர்டிஓ அருள் மாடுபிடி வீரர்களுக்கு உறுதிமொழி செய்து வைத்தார். 8. 05 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி மாலை 4.50 க்கு நிறைவடைந்தது.
இந்த போட்டியில் ஸ்ரீநற்கடல்குடி கருப்பண்ணசாமி கோவில் மாடு முதலில் அவிழ்த்து விடப்பட்டது. அதன் பிறகு முறையாக ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், திருச்சி மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகர், திருச்சி மாவட்ட எஸ்பி செல்வ நாகரெத்தினம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் மிக்ஸி, கிரைண்டர், சைக்கிள், கட்டில், டிரசிங் டேபிள், டைனிங் டேபிள், தங்க காசு, வெள்ளி காசு, ரொக்கம் என ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் 13 மாடுகள் பிடித்து முதலிடம் பிடித்த நவல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்ற வீரருக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சார்பில் வழங்கப்பட்ட விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை ஜல்லிக்கட்டு களத்தில் திருச்சி ஆர்டிஓ அருள் வழங்கி பாராட்டினார்.
/indian-express-tamil/media/post_attachments/5d0c9d28-1d3.jpg)
ஜல்லிக்கட்டு காளை பாய்ந்து மாடுபிடி வீரர்கள், போலீசார் உள்பட 87 பேர் காயம் அடைந்தனர். அதில் மாடுபிடி வீரர் 3 பேர் உரிமையாளர், 4 பார்வையாளர், 6 வீரர்கள் என 13 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டனர்.
இதில் திருச்சி எடத்தெருவை சேர்ந்த மணிகண்டன் (38), மணிகண்டத்தைச் சேர்ந்த ராகவன் (28), வாழவந்தான் கோட்டை சேர்ந்த வீரமணி (12), பாசிப்பட்டி ஜெய்சங்கர் (19), அரியமங்கலம் வசந்த் (25) பெரிய சூரியூரை சேர்ந்த சரத், சோழமேட்டை சேர்ந்த சுகுமார், துவாக்குடி சதீஷ் (26), புதுக்கோட்டை ஆராங்கல்லை சேர்ந்த ராஜ்குமார் ( 27 ), அன்னவாசல் சண்முகம் (42 ), கொங்க திரையான்பட்டி அருண் பாண்டி ( 22) மற்றும் கள்ளுகுடியைச் சேர்ந்த மணிகண்டன் (20), சின்ன பாண்டூறாபட்டியை சேர்ந்த பாண்டி (21), வீரப்பூர் மைக்கில் (28), பெரிய சூரியூர் சரத் (25), மாடுபிடி வீரர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் துவாக்குடி கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் விஸ்வநாதன் 54 என்பவரும் காயமடைந்தார். இதில் அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு முதல் பரிசு பைக்கும், இரண்டாவது பரிசு எல்இடி டிவியும் வழங்கப்பட்டது.
/indian-express-tamil/media/post_attachments/01f9776c-70c.jpg)
முன்னதாக திருச்சியில் மண்டல கால்நடை இணை இயக்குனர் கணபதி மாறன் தலைமையிலான கால்நடை மருத்துவ குழுவினர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு போதை மருந்து கொடுக்கப்பட்டுள்ளதா, ஜல்லிக்கட்டு போட்டிக்கு கலந்து கொள்வதற்கு உரிய தகுதி உள்ளதா என்பதை மருத்துவ ஆய்வு செய்தனர். அதன் பிறகு ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது. இதில் 681 ஜல்லிக்கட்டு மாடுகள் கலந்து கொண்டது, இரண்டு மாடுகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது.
அதேபோல் திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் பாலமுருகன் தலைமையிலான மருத்துவ குழுவினர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் போதை பொருட்கள் உட்கொண்டு உள்ளார்களா என்பதை பறிசோதனை செய்தும், ஜல்லிக்கட்டு போட்டியில் காயம் அடைந்தவர்களுக்கு முதல் கட்ட சிகிச்சையும் அளித்தனர். இதில் 349 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு 7 கட்டங்களாக களம் இறக்கப்பட்டனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருவெறும்பூர் ஏ.எஸ்.பி அரவிந்த்பெனவாத் தலைமையில் 510 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
/indian-express-tamil/media/post_attachments/5e7c7f51-60d.jpg)
இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சூரியூர் மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு களிக்கும் விதமாக கேலரிகள் மற்றும் தடுப்பு வேலிகளை பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் செய்து இருந்தனர். ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சுமார் 40 பேர் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு விழாவை பார்வையிட்டனர். ஜல்லிக்கட்டு பொதுமக்கள் இயற்கை உபாதைக்கு ஒதுங்குவதற்கு ஏதுவாக மொபைல் டாய்லெட் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட திருவளர்ச்சோலை சேர்ந்த செல்லப்பா என்பவரது ஜல்லிக்கட்டு மாடு வாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டு சென்றது, திரும்ப வந்தபோது எதிரே வந்த ஜல்லிக்கட்டு காளை மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தது உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளை பாலக்கரையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுச் செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
முன்னதாக, இந்த ஜல்லிக்கட்டு விழாவில் தனது மகன்கள் கவின், இன்பா ஆகியோருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்.