திருச்சியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து ரவுடிகளுக்கு விநியோகம் செய்து வருவதாக கிடைத்த தகவலின்படி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் சோதனையில் ஈடுபட்டார்.
இலால்குடி உட்கோட்டம், சமயபுரம் காவல் சரகம் அகிலாண்டபுரம் பகுதியில் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இரு பிரவினரிடையே கடந்த மாதம் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருதரப்பிலும் இதுவரை ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அச்சம்பவத்தில் நாட்டு வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டனர். இதன் அடிப்படையில் அப்பகுதியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வருவதாக காவல் கண்காணிப்பாளருக்கு சில தினங்களுக்கு முன் ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது.
இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை செய்து பெருகமணியைச் சேர்ந்த தீனா (எ) தீனதயாளன் (39) என்பவர் மீது பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், தீனதயாளன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
இதனை தொடர்ந்து தீனாவுடன் தொடர்பில் இருந்த அணலை பெரியார் நகரைச் சேர்ந்த மணி, சிவா, சூர்யா, ரஞ்சித், ரகு மற்றும் சங்கர் ஆகிய ஆறு நபர்கள் நாட்டு வெடிகுண்டு விற்பனை செய்து வந்தாக தெரியவந்துள்ளது. வாத்தலை பகுதியில் சித்தாம்பூர் என்ற இடத்திலுள்ள சித்தாம்பூர் வெடி கடையில் (வேறு பெயரில் உரிமம் பெற்றது) அதன் உரிமையாளர் முகமது தாஜ்தீன் (62) என்பவரிடம் வெடிபொருள்களை வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர், வெடி பொருள்களை நாட்டு வெடிகுண்டுகளாகவும், வெங்காய வெடிகளாகவும் மாற்றி திருச்சி மாவட்டம் மற்றும் அருகாமையில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த ரவுடிகளுக்கு விற்பனை செய்து வந்ததாக தெரியவருகிறது.
மேற்படி சித்தாம்பூர் வெடி கடையில் முகமது தாஜ்தீன் என்பவர் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் வெடி பொருள்களை பெற்று வந்து, வாத்தலை பகுதியில் வைத்து விற்பனை செய்து வந்தது எஸ்.பி அதிரடி சோதனையில் உறுதியானது.
இது தொடர்பாக, நாட்டு வெடிகுண்டு தயாரித்து விற்பனை செய்து வந்த அணலை பெரியார் நகரைச் சேர்ந்த மணி, சிவா, சூர்யா, ரஞ்சித், ரகு மற்றும் சங்கர் ஆகியோர் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். வெடி விற்பனை செய்த சித்தாம்பூர் வெடி கடையை மாவட்ட கண்காணிப்பாளர் வருண்குமார் ஆய்வு செய்து உரிமம், வெடி மருந்து கையிருப்பு, வெடி மருந்து கடையின் இடத்தின் உரிமையாளர் தொடர்பான விவரங்களை விசாரணை செய்து ஆய்வு செய்தார்.
மேற்கண்ட சம்பவங்களுடன் தொடர்புடைய அனைவரது மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டு வெடிகுண்டு தொடர்பான தகவல்கள், ரவுடிகளின் நடமாட்டம், கஞ்சா விற்பனை, போதை பொருள்கள் விற்பனை தொடர்பாக 9487464651 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் அளிக்குமாறு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, திருச்சியில் மிகப்பெரிய ரவுடிசம் செய்யக்கூடிய நபர்கள் நாட்டு வெடிகளை ஆங்காங்கே பதுக்கி வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் காவல்துறை மத்தியில் எழுந்துள்ளது. அந்தவகையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரியமங்கலம், பொன்மலை, லால்குடி காவல் சரகங்களில் நாட்டு வெடிகள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.