scorecardresearch

எஸ்.ஐ கையெழுத்தை போலியாக போட்டு முறைகேடு; காவலர் பணியிடை நீக்கம்

திருச்சி, மண்ணச்சநல்லூரில் காவல் உதவி ஆய்வாளர் கையெழுத்தை போலியாக போட்டு முறைகேடு; காவலரை பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி உத்தரவு

எஸ்.ஐ கையெழுத்தை போலியாக போட்டு முறைகேடு; காவலர் பணியிடை நீக்கம்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் செல்வராஜ். மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்கள் புகார் கொடுக்க தினமும் வந்து செல்கின்றனர்.

சான்று ஆவணங்கள், செல்போன்கள் போன்றவற்றை தவறவிட்டவர்கள், இது குறித்து புகார் கொடுத்து நிவாரணம் பெற முறையிடுவது வழக்கம்.

இதையும் படியுங்கள்: கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயன்றவர்கள் கைது: 6 கிலோ கஞ்சா பறிமுதல்

இந்நிலையில் இதுபோன்ற புகார் கொடுக்க வருபவர்களிடம் செல்வராஜ் முறைகேட்டில் ஈடுபட்டு வந்ததாக புகார் வந்தது. இது தொடர்பாக நடத்திய விசாரணையில் புகார்தாரருக்கு கொடுக்கப்பட்ட மனுவில் காவல் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) அருண் என்பவரது  கையெழுத்தை போலியாக போட்டு காவலர் செல்வராஜ் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இது குறித்து மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தகவல் தெரிவித்தார். இது தொடர்பாக விசாரணை செய்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், காவலர் செல்வராஜை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

முன்னதாக, லால்குடி காவல் நிலையத்தில் காவலர் செல்வராஜ் பணியாற்றியபோது, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்த காலத்தில் ஊரடங்கு அமலில் இருந்தபோது, மீன் பிடித்து மீன்களை வீட்டில் விற்பனை செய்த மீன் வியாபாரியை தாக்கி மீன்களை தனது வீட்டிற்கு காவலர் செல்வராஜ் எடுத்துச் சென்ற புகார் தொடர்பாக அப்போதே பணியிட நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Trichy sp suspend mannchanallur policeman for forgery si sign