நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு பிரிவினைவாத இயக்கம் என ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி வருண் குமார் பேசியுள்ளார்.
ஐந்தாவது தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு சண்டிகர் மாநிலத்தில் நடைபெற்றது. மாநாட்டில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி வரும் இளம் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அழைப்பு விடப்பட்டு கலந்து கொண்டனர்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமாரும் அதில் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் பங்கேற்கும் படியும், நாடு முழுவதும் உள்ள 22 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவிற்கு தலைமையேற்று சைபர் க்ரைம், இணையதள மிரட்டல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் அதனை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விளக்கும்படி வருண் குமாருக்கு மத்திய உள்துறை அறிவுறுத்தியிருந்தது.
அதன் அடிப்படையில் மேடையில் பேசிய எஸ்.பி. வருண்குமார், “நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய பிரிவினைவாத இயக்கம். நாம் தமிழர் கட்சியினால் நானும் என்னுடைய குடும்பத்தினரும் இணையதள குற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.
இணைய குற்றம் செய்யும் கூலிகளை கண்காணிக்க 14 சி என்ற அமைப்பை உருவாக்க வேண்டும்”.மேலும் சைபர் கிரைம், இணையதள குற்றங்கள், மிரட்டல்களை கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து விரிவான விளக்கத்தை திருச்சி எஸ்.பி.வருண்குமார் ஆதாரங்களோடு விளக்கி பேசினார்.
இந்த பேச்சு சீமான் மற்றும் திருச்சி எஸ்.பி வருண்குமார் இடையேயான மோதல் போக்கு இன்னும் தொடரும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ஏற்கனவே, என்.ஐ.ஏ உள்ளிட்ட தேசிய அமைப்புகளின் சோதனை வளையத்தில் இருக்கும் நாம் தமிழர் கட்சி குறித்து பிரதமர், உள்துறை அமைச்சர் தொடங்கி வைத்த தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் பகிரங்கமாக வருண்குமார் ஐபிஎஸ் பேசியுள்ளதால், அந்த கட்சிக்கு மேலும் சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
பிரிவினைவாத இயக்கங்களையும் கட்சிகளை தடை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சியை பிரிவினைவாத இயக்கம் என்றும், அந்த கட்சியின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் வருண்குமார் ஐபிஎஸ் மாநாட்டில் விளக்கி பேசியிருப்பதன் மூலம், அந்த கட்சிக்கு விரைவில் மத்திய அரசு மூலம் நெருக்கடி வர வாய்ப்புள்ளதாக போலீஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.