திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெகன் என்கின்ற கொம்பன் ஜெகன் (30). திருச்சி டோல்கேட், மண்ணச்சநல்லூர், பாண்டிச்சேரி, சேலம், நாமக்கல் போன்ற இடங்களில் நேரடியாகவும், கூலிப்படையாகவும், 11 கொலை வழக்குகளில் தொடர்புடையவர்.
இவர்மீது, கூலிப்படையாக செயல்பட்டது, கட்டப்பஞ்சாயத்து, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன. அதனால், அவர் தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவுப்படி அமைக்கப்பட்ட தனிப்படை போலீசாருக்கு, ரவுடி ஜெகன் சிறுகனூர் அருகே, சனமங்கலம் வனப்பகுதியில் பதுங்கி காட்டு விலங்குகளை வேட்டையாடி கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் தனிப்படை போலீசார், அந்தப்பகுதிக்கு சென்று ரவுடியை சுற்றி வளைத்தனர். அப்போது போலீசார் பிடிக்க முயன்றபோது, எஸ்.ஐ. வினோத்தை, ரவுடி ஜெகன் அரிவாளால் வெட்டி விட்டு தப்பிக்க முயன்றார்.
உடனே, தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் கருணாகரன் பாதுகாப்புக்காக வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுட்டதில், ஜெகன் மீது 2 குண்டுகள் பாய்ந்து காயமடைந்தார்.
போலீசார் அவரைப் பிடித்து லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போலீசார் சுட்டதில் படுகாயமடைந்த, ரவுடி ஜெகன் கடந்த வருடம் (22.11.2023) ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில் ஜெகன் கூட்டாளியோ உடன் உள்ளவரோ ஒருவர் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு இன்ஸ்டாகிராமில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மிரட்டல் விடுத்த நபரை தேடி வந்தனர்.
தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், மேற்படி இன்ஸ்டா ஸ்டோரி பதிவேற்றம் செய்தது 16 வயது சிறுவன் திவ்யேஷ் என தெரிய வந்தது.
இதன் அடிப்படையில், திவ்யேஷ் மீது, வாத்தலை காவல் நிலைய குற்ற எண்- 69/24, சட்டபிரிவு 153(В), 505(2) IPC r/w 66(D) IT Act-21 09.06.2024- வழக்குப்பதிவு செய்தனர். அவனிடம் விசாரணை செய்த போது இதில், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் விஷால் (18), த.பெ. வீரபத்திரன் ஆகிய இருவருக்கும் தொடர்பு உள்ளது தெரிய வந்தது.
மேற்படி இருவரும் சிறார்கள் என்பதால், சமூக வலைத்தளங்களில் அச்சுறுத்தும் வகையில் பதிவிடாமல், கவனமாக கையாள வேண்டுமென கடுமையாக எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், இதில் சம்மந்தப்பட்ட 17 வயதுடைய மற்றொரு சிறுவனைப் போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில், கொலை மிரட்டல் விடுத்த சிறுவன் மற்றும் அவரது பெற்றோரை, திருச்சி எஸ்.பி., வருண்குமார் தன் அலுவலகத்துக்கு அழைத்து, சிறுவனுக்கும், அவரது பெற்றோருக்கும் அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.
அப்போது, 'சமூக வலைதளங்களில் உழைப்பால் உயர்ந்த உத்தமர்களின் உண்மை கதைகள் உள்ளன. விவேகானந்தர், மகாத்மா, அப்துல் கலாம் போன்ற தலைவர்கள் உன்னை ஈர்க்கவில்லையா, மனதை நெறிப்படுத்தி நன்றாக படித்து வேலைக்கு செல்' என்று எஸ்.பி., அறிவுறுத்தினார்.
மேலும், சிறுவன் மீதான வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என போலீசாருக்கு உத்தரவிட்டார் எஸ்பி வருண்குமார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“