நாம் தமிழர் கட்சியினரின் அவதூறான, ஆபாசமான பதிவுகளை நீக்கக் கோரி திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அண்மையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையான மோதல் போக்கு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து தான் வெளியேறுவதாக எஸ்.பி வருண்குமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய அடையாளம் தெரியாத சில நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் மனு ஒன்று தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது, 'திருச்சி மாவட்ட எஸ்.பியாக கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 11 முதல் பணியாற்றி வருகிறேன். எனது மனைவி வந்திதா பாண்டே புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பியாக பணியாற்றி வருகிறார்.
எங்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த ஜூலை 11ம் தேதி திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தோம்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சமூக ஊடகங்களில் நான் சாதி பாகுபாடு பார்ப்பதாக என்னை பற்றி அவதூறு கருத்துகளை பரப்பி வருகிறார். சாட்டை துரைமுருகன் மற்றும் இடும்பாவனம் கார்த்தி ஆகியோர் சீமானுடன் சேர்ந்து என்னை இழிவுபடுத்தி பேட்டி கொடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து என்னை இழிவுபடுத்தும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவுகள் வெளிவந்ததால் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி திருச்சி தில்லைநகர் காவல்துறையில் மீண்டும் புகார் கொடுத்தேன். பெயர் தெரியாத 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளின் விசாரணைக்கு பெயர் தெரியாத அந்த நபர்களின் X எக்ஸ்தள ஐ.டிக்கள் தேவை. அப்போது தான் சரியான விசாரணையை மேற்கொள்ள முடியும்.
இதையடுத்து, திருச்சி தில்லைநகர் போலீசார் பெங்களூருவில் உள்ள எக்ஸ் கார்ப்பரேசனுக்கு கடிதம் எழுதியுள்ளனர். ஆனால், உரிய தகவல்களை அந்த நிறுவனம் தரவில்லை. ஆன்லைன் மூலம் தொல்லை கொடுப்பது, போலி ஐடிகளை உருவாக்கி மற்றவர்களை கீழ்த்தரமாக சித்தரிப்பது போன்றவற்றை தடுக்கவில்லை என்றால் அதுபோன்ற நபர்களுக்கு எக்ஸ் கார்ப்பரேசன் துணை போகிறது என்றே அர்த்தம்.
திருச்சி தில்லைநகர் போலீசாரின் கோரிக்கையை எக்ஸ் நிறுவனம் பரிசீலிக்காததால் எக்ஸ் தளத்தின் பதிவுகள் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களுக்கும் பரவி வருகிறது. எனது மற்றும் என் குடும்பத்தினர் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள பதிவுகளை நீக்கவில்லை என்றால் எனக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுவிடும். எனவே, ஆட்சேபனைக்குரிய பதிவுகளை எக்ஸ் தளம் நீக்குமாறு உத்தரவிட வேண்டும்.
உரிய தகவல்களை தராத அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கமாறு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும். எனது புகார் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்குமாறு திருச்சி தில்லைநகர் போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என அவர் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை அதிகாரியாக கடமையை செய்த போது எஸ்.பி.வருண்குமார், அவரது மனைவி மற்றும் குழந்தைகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு மிகவும் அருவுருக்கத்தக்க வகையில் பதிவு செய்து வருகின்றனர். இது குறித்து புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. எனவே, எக்ஸ் தளத்திலிருந்து இது போன்ற பதிவுகளை உடனடியாக நீக்கவும், எக்ஸ் தளத்தில்
பதிவிட்ட நபர்களின் விவரங்களை தர வேண்டும் என எஸ்.பி.வருண்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.
இதையடுத்து, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புகார் குறித்து உரிய விளக்கம் கேட்டு பதில் அளிக்க கால அவகாசம் கோரினார். பின்னர், தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் மற்றும் குற்றவியல் வழக்கறிஞர் ஆண்டனி பிரபாகர் ஆஜராகினர். அப்போது, சமூக வலைத்தளங்களில் இது போன்ற அவதூறான கருத்துக்களை போலி முகவரி கொண்டு பதிவிடுவது அதிகரிக்க தொடங்கியுள்ளது. மத்திய அரசு இதனை கட்டுப்படுத்த வேண்டும். எக்ஸ் தள கணக்குகள் துவங்கும்போது ஆதார் அட்டைகளை கட்டாயமாக்க வேண்டும் என வாதிட்டார். இதனைத் தொடர்ந்து, மனுதாரர் புகார் குறித்து மத்திய அரசு, மற்றும் X வலைதளம் பொறுப்பு அதிகாரி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை வரும் 21ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.