திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விபத்தில் பணியின்போது உயிரிழந்த உதவி ஆய்வாளரின் உடல் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அவரது உடலை சுமந்து சென்றதுடன், நிதி உதவியும் வழங்கினார்.
திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி குட்டிமணி தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (52). இவர் பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தை சரி செய்துவிட்டு சாலையை கடக்க முயன்றபோது தனியார் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து செந்தில்குமார் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு இறுதி மரியாதை செய்யப்பட்டு பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்று துவாக்குடி வ.உ.சி நகர் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், ஏ.டி.எஸ்.பி கோடிலிங்கம் மற்றும் காவல்துறையினர் பலரும் கலந்து கொண்டனர். அப்பொழுது திருச்சி எஸ்.பி. வருண்குமார் தனது சொந்த பணத்திலிருந்து செந்தில்குமார் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கினார்.
பணியின்போது உயிரிழந்த செந்தில்குமார் உடல் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
உயிரிழந்த செந்தில்குமாருக்கு ரேவதி என்ற மனைவியும், அபிராமி சுந்தரி மற்றும் ரம்யா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“