ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த டிசம்பர் 23-ம் தேதி பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நாட்களில் தினந்தோறும் உற்சவரான ஶ்ரீநம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.
Advertisment
பகல் பத்து வைபவத்தின் 10-ம் திருநாளான இன்று ஶ்ரீநம்பெருமாள் மோகினி அலங்காரம் எனும் நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்துருளி அர்ஜுன மண்டபத்தில் சேவை சாதித்து வருகிறார். பின்னர், மாலை 5 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு 5.30 மணிக்கு ஆரியபடாள் வாசல் சென்று, இரவு 7 மணிக்கு திருக்கொட்டார பிரகாரம் வழியாக வலம் வந்து கருட மண்டபத்தை சென்றடைவார். அங்கு ஆழ்வாராதிகள் மரியாதையாகி இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு 9 மணிக்கு மூலஸ்தானத்துக்கு வருவார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு நாளை (ஜனவரி 2) அதிகாலை 4.45 மணிக்கு நடைபெறவுள்ளது. இதையொட்டி ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் வழிபட ஏதுவாக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கொரோனா பெரும் தொற்று காரணமாக 2 ஆண்டுகளாக தடைபட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கும் நிலையில், ஸ்ரீரங்கத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கொண்டிருப்பதால் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 3500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருகிற 12-ஆம் தேதியோடு 21 நாட்கள் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நிறைவு பெறுகிறது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil