/indian-express-tamil/media/media_files/QxQakbG8Oa662F4pzgSd.jpeg)
Trichy
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வர். அப்படி வந்து செல்வோரில் பெரும்பாலானோர் ஸ்ரீரங்கம் அம்மா மண்டப காவிரி படித்துறையில் நீராடியே ரெங்கநாதரை வழிபடுவது வழக்கம்.
மேலும் இங்கு வேத விற்பன்னர்கள் எப்போதும் இருப்பதால் தத்தம் முன்னோர்க்கு தர்ப்பணம் கொடுக்க தவறியவர்கள், தங்கள் முன்னோர்களுக்கு காவிரியில் புனித நீராடி தர்ப்பணம் கொடுப்பதும் வழக்கம். அந்தவகையில் இன்று காலை காவிரியில் புனித நீராடிய பலர் அம்மா மண்டப படித்துறையில் அமைந்திருக்கும் அரசமரத்தடியில் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வந்தனர்.
இந்த அம்மாமண்டபம் படித்துறையில் உள்ள அரச மரம் 70 ஆண்டுகள் பழமையானது. இந்த அரச மரம் அம்மா மண்டபத்தின் பெரும்பாலான பகுதிக்கு நிழல் தரும் விருட்சகமாக பரந்து விரிந்து இருந்தது.
இந்நிலையில் திருச்சியில் நேற்று பெய்த திடீர் மழையாலும், இன்று காலை முதல் சாரல் மழை மற்றும் காற்றின் ஈரத்தன்மையால் அரச மரத்தின் பெரிய கிளை ஒன்று பலத்த சத்தத்துடன் முறிந்து கீழே சாய்ந்தது. இதை சற்றும் எதிர்பாராதா வேத விபன்னர்கள், தர்ப்பணம் கொடுக்க வந்தவர்கள் தலை தெறித்து அங்கும் இங்கும் ஓடினர்.
இருந்தாலும், அரச மரத்தின் கீழே அமர்ந்து தர்ப்பணம் கொடுத்தவர்களில் 10-க்கும் மேற்பட்டவர்கள் மரக்கிளை முறிந்து விழுந்த இடத்தில் கிளைகளுக்கு அடியில் சிக்கிக் கொண்டனர். அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் ஸ்ரீரங்கம் தீயணைப்புத் துறையினர் அவர்களை சிரமப்பட்டு மீட்டபோதும், சிலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து அறிந்த ஸ்ரீரங்கம் போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து மரக்கிளைகளை உடனே அகற்றும் பணியில் பணியாளர்களை ஈடுபடுத்தினர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.