ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கும், தடுக்க முயன்ற ஆசிரியருக்கும் அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு நூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு அக்கவுண்டன்ஸ் மற்றும் சயின்ஸ் பிரிவில் படிக்கும் மாணவர்களிடையே முன்பகை காரணமாக மோதல் எழுந்துள்ளது.
இந்த மோதலில் மாணவர் ஹரி சங்கர் என்பவர், வெளியாட்களை அழைத்து வந்து வகுப்பறைக்குள் புகுந்து அன்புமணி என்ற மாணவனை வெட்டியுள்ளார். அப்போது தடுக்க முயன்ற ஆசிரியர் சிவகுமார் என்பவருக்கு தலையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
இதனை அடுத்து பள்ளியின் ஆசிரியர் சிவக்குமார் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசிரியரை வெட்டிய மாணவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மோதலால் சில மாணவர்கள் காயம் அடைந்தனர். அதில் ஒரு மாணவர் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பள்ளியில் ஆசிரியரை மாணவர்கள் வெட்டிய சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், போகிற போக்கை பார்த்தால், தமிழகத்தில் 'அரிவாளை' தடை செய்ய வேண்டும் போல தெரிகிறதே? என மாநில பா.ஜ.க., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“