ஸ்டாலினிடம் வைத்த கோரிக்கை; மறுநாளே அரசு பஸ்ஸை ஓட்டி வந்த எம்.எல்.ஏ: மக்கள் நெகிழ்ச்சி
திருச்சி கேகே நகர், ஓலையூர் சிப்பி நகர் பொதுமக்கள் நேற்று முதல்வரிடம் பேருந்து கேட்டு மனு அளித்த நிலையில், கேட்ட வழித்தடத்தில் இன்று அரசு பேருந்தை ஓட்டிச் சென்றார் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ பழனியாண்டி.
Trichy Tamil News Updates: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் அரசு முறை பயணமாக திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு செல்ல நேற்று திருச்சி வந்தார். திருச்சி காட்டூரில் அரசு பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் ஏர்போர்ட், கேகே நகர் பகுதி மக்களின் குறைகளை விமான நிலைய வளாகத்தில் கேட்டறிந்தார்.
அப்போது கேகே நகர், ஓலையூர் சிப்பி நகர் குடியிருப்போர் தங்களது பகுதிக்கு கூடுதல் பேருந்து சேவை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை முதல்வரிடம் கொடுத்தனர். மனுவை பரிசீலித்த முதல்வர் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கரிடமும், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியிடமும் கொடுத்து உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதை அடுத்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் லிமிடெட் திருச்சி மண்டலம் சார்பில், கே கே நகர் முதல் ஓலையூர் வரை மகளிர்க்கான கட்டணமில்லா பேருந்து சேவையுடன் கூடிய கூடுதல் பேருந்து சேவையை உடனடியாக வழங்கிட ஏற்பாடு செய்தது.
அதன்படி இன்று காலை ஓலையூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் புதிய வழித்தடத்தில் செல்லும் அரசு பேருந்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் தலைமையில், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி முன்னிலையில் அரசு பேருந்து வழித்தடத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து புதிய வழித்தடத்தில் இயங்கும் அரசு பேருந்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு எம்எல்ஏ பழனியாண்டி ஓட்டிச் சென்றார். இந்த பேருந்தானது கேகே நகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஓலையூர் பஸ் நிறுத்தம் வரை தினமும் காலை மாலை என 8-முறை இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.