க.சண்முகவடிவேல்
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்கும் பணியில் கோயில் நிர்வாகம் கடந்த சில மாதங்களாக மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கு அப்பகுதியில் குடியிருப்போர் மற்றும் மக்கள் நலச்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை கையில் எடுத்ததால் தற்காலிகமாக மீட்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருப்பதாக கோயில் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்த விபரம் வருமாறு:- திருச்சி ஸ்ரீரங்கம் காந்தி சாலையில் ராமசாமி பிள்ளைத் தோட்டம் என்ற இடம் சுமார்.1.25 ஏக்கர் பரப்பளவில் இருக்கிறது. ராமசாமி பிள்ளை என்பவருக்கு சொந்தமான இந்தத் தோட்டத்தில் ரெங்கநாதர் கோயிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களின்போது அன்னதானம், தண்ணீர் பந்தல் உள்ளிட்ட தர்ம காரியங்கள் செய்யும் வகையில் அந்த இடத்தை கோயிலுக்கு ஆவணப்படுத்தி வைத்திருந்தார். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்புவரை அந்த இடத்தில் அன்னதானம் உள்ளிட்ட திருப்பணிகளுக்கு பயன்படுத்தி வந்தனர்.
பின்னாளில் வந்த ராமசாமி பிள்ளையின் சந்ததியினர் அன்னதானம் உள்ளிட்ட தர்ம காரியங்களை அங்கே செயல்படுத்தாமல் நிறுத்தி விட்டனர். மேலும், அந்த இடத்தை வேறு சிலருக்கு குத்தகை, வாடகைக்கு விட்டு அதன் பலன்களை அனுபவித்து வந்தனர். இதுகுறித்த தகவலின் அடிப்படையில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் நிர்வாகம் அந்த இடத்தை கோயில் வசம் ஒப்படைக்கும்படி கேட்டபோது, அதற்கு அவர்கள் பதில் அளிக்காமல் மௌனம் காத்தனர்.
இதனையடுத்து கோயில் நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் ஆவணப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கோயிலுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதற்கிடையே அந்த இடத்தை பல்வேறு நபர்களுக்கு ராமசாமி பிள்ளையின் சந்ததியினர் தங்கள் சொத்து எனக்கூறி விற்றுவிட்டனர். அந்த இடத்தை வாங்கியவர்களும் அங்கு 9 அடுக்குமாடி குடியிருப்புகள், 2 தனி வீடுகள், ஒரு மருத்துவமனை, பிரபல இனிப்பு கடை உள்ளிட்ட இரண்டு வணிக வளாகங்கள் போன்றவற்றைக் கட்டி கடந்த பல ஆண்டுகளாக அவர்களது சொந்த பயன்பாட்டில் வைத்திருந்தனர்.
அத்துடன் அந்த இடத்தை விலைக்கு வாங்கியதாகக்கூறி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் நிர்வாகத்திடம் உரிமைக்கோரி வந்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த இடம் கோயிலுக்குத்தான் சொந்தம் என்றும், கோயில் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஸ்ரீரங்கம் கோயில் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற அமீனாவுடன் வந்து, ராமசாமி பிள்ளை தோட்டத்தில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை அகற்றப்போவதாக காலைமுதலே தகவல்கள் காட்டுத்தீயாக பரவின.
இந்த சூழலில் ராமசாமி பிள்ளை தோட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருப்போர், வணிக நிறுவனங்களை சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைந்ததுடன், அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள், நண்பர்கள், சொந்தபந்தங்களுடன் சாலையில் திரண்டனர். இதனால் ராமசாமி பிள்ளை தோட்டம் எதிரே இருந்த சாலையில் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் நிவேதாலட்சுமி தலைமையிலான போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட குடியிருப்பு வாசிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அங்கே குடியிருப்பவர்கள் மற்றும் ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்கம் தலைவர் மோகன்ராம் உள்ளிட்ட பலரும், ராமசாமி பிள்ளை தோட்டத்தின் சில பகுதிகளை நாங்கள் எங்களின் பெயருக்கு வாங்கி பத்திரம் பதிவு செய்தும், வீடுகளை கட்டி அதற்கு மாநகராட்சிக்கு வரியினங்களையும் கட்டி வருகின்றோம்.
இந்த சூழலில் திடீரென ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் இந்த இடம் கோயிலுக்கு சொந்தமானது எனக்கூறி எங்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கள் இடத்தை ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் உரிமைக்கோரவும் முடியாது. எனினும், நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதாலும், எங்கள் தரப்பின் நியாயங்களைக் கூறி உரிய நிவாரணம் பெற அவகாசம் வேண்டும் எனக்கூறியும் பதாகைகளை கையில் தூக்கி கோயில் நிர்வாகத்திற்கு எதிராக குரல் எழுப்பினர்.
அதேசமயத்தில் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் கோயில் வழக்கறிஞர்கள் சீனிவாசன், நாராயணன் உள்ளிட்ட கோயில் அதிகாரிகள் நீதிமன்றத்தால் அனுப்பப்பட்ட அமீனாவையும் அழைத்துக்கொண்டு இடத்தை வசப்படுத்த அங்கு வந்தனர். அமீனாவை கண்ட குடியிருப்புவாசிகளின் கோபம் உச்சம் தொட்டது. 'பல ஆண்டுகளாக எங்களது இடத்தில் குடியிருக்கும் எங்களை அப்புறப்படுத்தவோ, ஆக்கிரமிப்பாளர்கள் என்றோ கூறக்கூடாது. நாங்கள் பத்திரம் வாங்கி, வரி செலுத்திதான் இங்கே பல ஆண்டுகளாக குடியிருக்கின்றோம். இந்த இடத்தை எங்களுக்கு பத்திரம் செய்யும்போது கோயில் நிர்வாகம் எங்கே போனது, மாநகராட்சிக்கு வரியினங்கள் செலுத்தியும், மின் நுகர்வோர் அட்டை பெற்றபோதும் எங்கே போனது' எனக்கூறி நீதிமன்ற உத்தரவை நடமுறைப்படுத்தாமல் அமீனாவிடம் நிறுத்தி வைக்ககோரினர்.
இந்த இடம் தொடர்பான வழக்கில் கோயில் நிர்வாகத்தோடு இங்கு பல ஆண்டுகளாக குடியிருக்கும் எங்களையும் இந்த வழக்கில் இணைத்துக்கொள்ள வேண்டும் எனக்கோரி அமீனாவிடம் 44 நபர்கள் தனித்தனியாக மனு கொடுத்தனர். ஆக்கிரமிப்பு எனக்கூறி வந்த அமீனாவுக்கு 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து கோஷம் எழுப்பவே பேரதிர்ச்சியடைந்த அமீனா, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு அந்த மனுக்களை நீதிபதியிடம் கொடுத்து உரிய பதில் விரைவில் தெரிவிக்கப்படும் எனக்கூறிவிட்டு கிளம்பினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.