ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உரிய அனுமதியின்றி ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்நிலத்தை இதுவரை பயன்படுத்தியதற்கு மாத வாடகை செலுத்துமாறும் அந்த நோட்டீசில் கேட்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட வருவாய் நிர்வாகத்தில் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகம் உருவாக்கப்பட்ட போது, தற்காலிகமாக அதற்கான அலுவலகம் ஸ்ரீரங்கத்திலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் இயங்கியது. அதன்பின் கடந்த 2008-ம் ஆண்டு திருவானைக்காவல் சக்தி நகரில் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர், உணவுப் பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர் போன்ற அலுவலகங்களை உள்ளடக்கி 2 தளங்களுடன் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கான புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
தற்போது செயல்பாட்டில் உள்ள இக்கட்டிடம், ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் இருப்பதாகவும், முன் அனுமதியின்றி இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகவும் கூறி இந்து சமய அறநிலையைத்துறை பிரச்சினையை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளதாவது:
ஸ்ரீரங்கம் வெள்ளித் திருமுத்தம் கிராமத்தில் டி.எஸ் எண் 2163-ல் உள்ள 10.26 ஏக்கரில் 0.249 ஏக்கர்ஸ் நிலத்தில் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த இடம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமான இடமாகும். கோயில் சொத்து பதிவேட்டிலும் இந்த இடத்தின் விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கோயில் நிர்வாகத்தின் அனுமதியின்றி வட்டாட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பாளர்கள், தங்களை வாடகைதாரர்களாக மாற்றிக் கொள்ள முன்வந்தால், அதனை பரிசீலிக்குமாறு அரசாணை உள்ளது. இதன்படி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கோயில் இடத்தில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதை ஒப்புக்கொண்டு, அரசு மருத்துவமனை பயன்படுத்த ஆரம்பித்த காலத்திருந்து தற்போது வரை அதற்குண்டான மாத வாடகை தொகையை செலுத்தி வருகின்றனர்.
அதனடிப்படையில், ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் முன் அனுமதியின்றி வட்டாட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளதால், இந்த நிலத்துக்குண்டான மாத வாடகைத் தொகையை, கோயில் நிலத்தைப் பயன்படுத்த தொடங்கிய நாளில் இருந்து செலுத்த வேண்டும். இதற்கான வாடகை, நிலவாடகை நிர்ணயக்குழு மூலம் கணக்கீடு செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பாக கோயில் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தொடக்கத்திலிருந்தே ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் பெயரில் இருந்த இந்த நிலத்தை, இடைப்பட்ட காலத்தில் முனிசிபல் பொது இடம் என பதிவு செய்து, அங்கு வட்டாட்சியர் அலுவலகத்தைக் கட்டியுள்ளனர். அண்மையில் இதை நாங்கள் கண்டறிந்தோம். அதனடிப்படையில் தற்போது நாங்கள் நிர்ணயிக்கும் கட்டணத்தை மாதந்தோறும் வாடகையாக செலுத்துமாறு ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அறிவுறுத்தியுள்ளோம். அதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டால் முறைப்படி அந்த இடத்தை மீட்டு கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’ என்றனர்.
இதுகுறித்து வருவாய்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பதிவேடுகளில் இந்த இடம் முனிசிபல் பொது இடம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே, இங்கு வட்டாட்சியர் அலுவலகம் கட்ட அப்போதைய மாவட்ட ஆட்சியரால் இந்த இடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் உரிமை கோருவதால், ஒரு குழு அமைத்து ஆய்வு மற்றும் நில அளவை செய்து இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில், நெடுங்காலமாக ஸ்ரீரங்கத்தை சுற்றி அடிமனை பிரச்சினை என்ற ஒன்று இன்று வரை நிலுவையில் இருக்கின்றது. பொது மக்களுக்கு ஒரு நீதி அரசாங்கத்துக்கு ஒரு நீதி என செயல்படுவது வேதனைக்கு உரிய விஷயமாகும். கோயில் நிலத்தில் பொதுமக்கள் வீடு கட்டி இருந்தால் அதை இடித்து தரைமட்டம் ஆக்கி இடத்தை வீட்டில் நடவடிக்கைகளை கோயில் நிர்வாகம் எடுத்து பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கிறது. அதே கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தை வருவாய்த்துறையினர் ஆக்கிரமிக்கலாம், எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலையில் பல்வேறு சட்ட விதிகளை கைகாட்டி நோட்டீஸ் கொடுப்பதோடு நிறுத்திக் கொள்கிறது.
இது ஸ்ரீரங்கத்தில் மட்டும் நடந்து விட்டதாக கருத வேண்டாம் தமிழ்நாட்டில் உள்ள பல பெரும் கோயில் நிலங்களை அரசாங்கமே ஆக்கிரமித்து அனுமதியின்றி தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது முறையாக ஆய்வு செய்யும்போது நிறைய தெரியவரும் என ஆதங்கப்பட்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“