திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் அரங்கில் பள்ளி மாணவர்களுக்கான போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, உதவி ஆட்சியர் (பயிற்சி) அமித்குப்தா, திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அருள், உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு உரையாற்றினர்.
பின்னர், போதைப் பொருள் எதிர்ப்பு குழுவினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவிக்கையில்; "மாணவர்களுக்கு போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் போதைப்பொருள் எதிர்ப்பு குழு செயல்படும்.
திருச்சியில் 434 பள்ளிகளில் இருந்து போதைப் பொருள் குறித்த தகவலையும் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த வாட்ஸ் அப் எண் மற்றும் டோல் ஃப்ரீ எண் கொடுக்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நிறுத்தும் வரை சோதனை தொடரும்.
மேலும் தகவல் கொடுக்கப்பவர்கள் விபரங்கள் எதுவும் வாங்க போவதில்லை. உணவு மருந்து பாதுகாப்பு துறை அதிகாரிகள் மூலம் எட்டு குழுக்கள் தலைமையில் தினமும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்து கடைக்கு சீல் வைக்கப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் மெத்தனால் ஒரு துளி கூட தொழிற்சாலையை விட்டு வெளியேறவில்லை. அனுமதி கொடுக்கப்பட்ட 14 தொழிற்சாலைகளில் கையிருப்பு சரியாக உள்ளது. டாஸ்மாக் மதுபான வகைகள் அனுமதித்த நேரத்தை தாண்டி மற்ற இடங்களில் இரண்டாம் கட்ட விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக்கில் உள்ள மதுபான வகைகளையும் இருப்பு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் அனைத்து கோணங்களிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. உரிமை இல்லாத பார் குறித்த தகவல் வந்தால் ஆய்வு செய்து உடனடியாக மூடி சீல் வைக்கப்படும்" என ஆட்சியர் தெரிவித்தார்.
மேலும், திருச்சி மாவட்டத்தில் போதைப்பொருளை ஒழிப்பதற்கு அனைத்துத்துறை அதிகாரிகளும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். போதை பொருள் குறித்த தகவல்களை அதிகமாக கொடுக்கும் மாணவர்கள் திருச்சியின் ஒரு நாள் ஆட்சியராக அமர்த்தப்படுவார். அதிகமான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் தினம் ஒருவர் அமர்த்தப்படுவார்கள் என ஆட்சியர் தெரிவித்தது பெருத்த கைத் தட்டலைப் பெற்றது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“