New Update
/indian-express-tamil/media/media_files/2025/08/02/trichy-2025-08-02-16-58-08.jpg)
Trichy
உனக்கு எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன், நீ என்னுடன் ஆசைக்கு இணங்க வேண்டும், என்று சஞ்சீவி கேட்டதாக கீர்த்திகா குற்றம்சாட்டியுள்ளார்.
Trichy
திருச்சி மாவட்டம், துறையூர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்ற பெண்ணிடம், விசாரணை என்ற பெயரில் சிறப்பு உதவி ஆய்வாளர் சஞ்சீவி உல்லாசத்திற்கு அழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த கீழக்குன்னுப்பட்டியில் வசித்து வரும் சிவக்குமார் மற்றும் கீர்த்திகா தம்பதியினர் காதல் திருமணம் செய்து மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். சிவக்குமார் ஒரு லாரி ஓட்டுநர். இந்நிலையில், சிவக்குமாருக்கும் அவரது பெரியப்பா ஜோதிவேல் என்பவருக்கும் கிணற்று நீர் பாய்ச்சுவது தொடர்பாக நீண்ட நாட்களாகப் பிரச்சனை இருந்து வந்துள்ளது.
கடந்த 29ஆம் தேதி, கீர்த்திகா வயலுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருந்தபோது, ஜோதிவேல் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரைத் தாக்கியுள்ளார். இதனால் கீர்த்திகா காயமடைந்து துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து ஜோதிவேல் மீது துறையூர் காவல் நிலையத்தில் கீர்த்திகா புகார் அளித்தார். ஆனால், காவல் துறையினரிடமிருந்து எந்தவிதமான அழைப்பும் வரவில்லை.
இதற்குப் பிறகு, ஜோதிவேல் கீர்த்திகா மற்றும் அவரது கணவர் சிவகுமார் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை விசாரிப்பதற்காக, துறையூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சஞ்சீவி, கீர்த்திகாவை காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளார். விசாரணைக்காகச் சென்ற கீர்த்திகாவிடம், சஞ்சீவி நாகரிகமற்ற முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
"நீ உயர் ஜாதிப் பெண்ணாக இருந்தும், தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவனைத் திருமணம் செய்து மூன்று குழந்தைகளைப் பெற்றுள்ளாய். உனக்கு எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன், நீ என்னுடன் ஆசைக்கு இணங்க வேண்டும்" என்று சஞ்சீவி கேட்டதாக கீர்த்திகா குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு மறுத்தால், தனது புகார் மனுவை தாமதப்படுத்தி, அலைக்கழிப்பேன் என்றும் அவர் மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த கீர்த்திகா, அழுதுகொண்டே வீட்டிற்கு வந்து, வெளியூரில் லாரி ஓட்டிக்கொண்டிருந்த தனது கணவரிடம் நடந்தவற்றைத் தெரிவித்துள்ளார்.
காவல் நிலையத்தில் நடந்த இந்த அத்துமீறல்களை விவரித்து, சுமார் இரண்டு நிமிடங்களுக்கு மேலாக கீர்த்திகா பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.