திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சந்திரமோகன். இவர் ரோந்து வாகனத்தில் அரியமங்கலம் ஸ்டாலின் நகர் டாஸ்மாக் மதுபான கடை அருகாமையில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.
Advertisment
அப்போது அவ்வழியே வந்த பொலிரோ பிக் அப் வாகனத்தை சோதனையிட்டபோது வாகனத்தில் இரண்டு அரிவாள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொலிரோ பிக் அப் வாகனத்தில் வந்த இருவரையும் போலீசார் பிடிக்க முற்பட்டபோது அதில் வந்த ரவுடிகளுக்கும் அவர்களுக்கு ஆதரவாக மேலும், பெண்கள் உள்பட 3 பேரும் சேர்ந்து 5 பேர் கொண்ட கும்பல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சந்திரமோகன் மற்றும் வெற்றிமணி இருவரையும் கையால் தாக்கி விட்டு பேட்ரோல் வாகனத்தை சேதப்படுத்தினர். மேலும், அரிவாளை காட்டி மிரட்டி விட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து சந்திரமோகன் அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் தப்பி ஓடிய பிரபல ரவுடிகள் அரியமங்கலம் அண்ணா நகர் முருகன் கோவில் தெருவை சேர்ந்த முத்துக்குமார்( 29 ), அவரது சகோதரர் இளவரசன் மற்றும் நண்பர் அரியமங்கலம் திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (23) ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் தப்பி ஓடிய ரவுடி முத்துகுமாரின் சகோதரிகளான ரேணுகாதேவி, கிருஷ்ணவேணி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.
திருச்சி மாநகரில் பிரபல ரவுடிசம் செய்து வந்தவர்களை காவல் நிலைய குற்றப்பதிவேடுகளின்படி, கண்டறிந்து மீண்டும் அவர்களை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய முற்பட்டபோது எழுந்த தகராறே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட முத்துக்குமார் திருச்சியின் பிரபல ரவுடி மறைந்த கேபிள் சேகர் என்பவரின் மகன் என்பதும், முத்துக்குமாரின் சகோதரி வழக்கறிஞர் பயிற்சி பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”