திருச்சி எஸ்.பி வருண்குமாருக்கு நகரின் பிரபல ரவுடிகள் பொதுமக்களிடமிருந்து போலி ஆவணங்களை தயாரித்து சொத்துக்களை ஏமாற்றி பறித்துக் கொண்டதாக புகார்கள் வந்தது. இதனைத்தொடர்ந்து, கடந்த 19 ஆம் தேதி ஆப்ரேஷன் அகழி என்ற பெயரில் அதிரடியாக ஒரு குழுவிற்கு ஒரு இன்ஸ்பெக்டர் என்ற விதத்தில், 14 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், 14 சப்-இன்ஸ்பெக்டர்கள், 42 போலீசார் தனித்தனியாக 14 குழு அமைத்து திருச்சியில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் சம்பந்தப்பட்ட அந்த 14 குற்றவாளிகளின் தொடர்பில்லாத 258 சொத்து ஆவணங்களும், 68 வங்கி கணக்கு புத்தகங்களும், 75 புரோ நோட்டுகளும், 82 நிரப்பப்படாத காசோலைகளும், 18 செல்போன்களும், 84 சிம்கார்டுகளும், பிறஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
அப்படி கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் கணக்கில் வராத 66 அசல் பத்திரங்களும், பாண்டிச்சேரி மது வகைகள் 31 பாட்டில்களும் இந்திய ஜனநாயக கட்சி மாநில இளைஞரணி செயலாளராக உள்ள திருவெறும்பூர் அருகே உள்ள நத்தமாடிப்பட்டியை சேர்ந்த பிரபல சரித்திர பதிவேடு குற்றவாளியான மைக்கேல் சுரேஷ் (எ ) பட்டரை சுரேஷ் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட 66 அசல் பத்திரங்களும் சட்டவிரோதமாகவும், கட்டப்பஞ்சாயத்து மூலமாகவும், கந்து வட்டி தொழில் மூலமாகவும் மிரட்டி பெறப்பட்டவை என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட பட்டரை சுரேஷ் வீட்டில் ஆள் இல்லாத நிலையில் அவர் எங்கு சென்றார் என போலீசார் அவரை வலை வீசி தேடி வந்தனர். இந்த நிலையில். எஸ்.பி தனி படை போலீசாருக்கு பட்டரை சுரேஷ் பாண்டிச்சேரி மருத்துவமனைக்கு குடும்பத்தோடு சென்றது தெரியவந்தது. அதன் அடிப்படையில், அங்கு விரைந்து சென்ற எஸ்.பி தனி படை போலீசார் மருத்துவமனை செல்லும் வழியில் பட்டரை சுரேஷை அவரது குடும்பத்துடன் கைது செய்தனர்.
பின்னர் அங்கிருந்து திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு பட்டரை சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தை நேற்று இரவு கொண்டு வந்து, நிலையில் பட்டரை சுரேஷிடம் இன்று காலை முதல் கிடுக்கிப்பிடி பிடி விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவர் யார் யாரை மிரட்டி பணம் பெற்றார், நிலம் வாங்கினார் இதற்குப் பின்புலத்தில் யார் யார் இருந்தார்கள் என்பது குறித்தும் விசாரணை தொடர்ந்து நிலையில், திருவெறும்பூர் போலீசாரால் பட்டரை சுரேஷ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்.
செய்தி: க.சண்முகவடிவேல் - திருச்சி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“