scorecardresearch

மதுரை வரிச்சூர் செல்வத்திடம் மன்னிப்பு கேட்டேனா? திருச்சி சூர்யா விளக்கம்

அண்ணாமலையை மட்டும் விமர்சனம் பண்ணிக்கொண்டு இருந்தால் காயத்ரி ரகுராமால் என்ன சாதித்து விட முடியும்; வரிச்சூர் செல்வத்திடம் நான் மன்னிப்பு கேட்கவில்லை – திருச்சி சூர்யா

திருச்சி சூர்யா
திருச்சி சூர்யா

வரிச்சூர் செல்வத்திடம் தான் மன்னிப்பு கேட்கவில்லை என்றும், காயத்ரி ரகுராம் நடைபயணம் போகட்டும் அப்போது தான் அவரது லட்சணம் தெரியும் என்றும் திருச்சி சூர்யா கூறியுள்ளார்.

சில தினங்களுக்கு முன் வரிச்சூர் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ”நான் ஜாலியாக காதல் செய்து கொண்டிருக்கிறேன். எல்லாத்தையும் காதலிக்கிறேன். உங்களையும் காதலிக்கிறேன். இந்த மக்கள் எல்லாத்தையும் காதலிக்கிறேன். நான் ஒரு பப்புக்கு போனேன். நான்கு நடிகர்கள் வந்து என்கூட புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். பாவம் அந்த காயத்ரி ரகுராம். ஒரு நாள் ஓட்டலில் சாப்பிடுவதற்காக போனேன். மாஸ்டர் கணேஷ், ஒரு ஐந்து ஆறு பேர் வந்திருந்தார்கள். வந்தபோது என் கூட ஃபோட்டோ எடுத்தார்கள். அவ்வளவுதான். அப்புறம் திருச்சி சூர்யாகிட்ட பேசினேன். அவர் என்கிட்ட சாரி கேட்டாரு. நான் தெரியாமல் பதிவு போட்டுவிட்டேன் என்றார். ஏம்ப்பா இப்படி எல்லாம் போடலாமா? அந்த பொண்ணு யாருன்னே தெரியாது. ஃபோட்டோ தான் எடுத்தது. இது குத்தமாய்யா. அவங்களுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது சாமி. அரசியல்வாதிக்கும் எனக்கும் ரொம்ப தூரம்” எனக் கூறியிருந்தார்.

இதையும் படியுங்கள்: சமூகநீதி பற்றி அதிகம் பேசுகிறோம்; ஆனால், அதற்கு மாறாக நடக்கிறது – ஆளுநர் ஆர்.என். ரவி

இந்நிலையில், இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த திருச்சி சூர்யா, “வரிச்சூர் செல்வத்தை காயத்ரி ரகுராம் சந்தித்தது தொடர்பாக எனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தேன். அப்போது வரிச்சூர் செல்வம் என்னிடம் பேசியதாகவும், நான் மன்னிப்பு கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் எனக்கு அவர் தனியாக நான் தெரியாமல் செய்தியாளர் சந்திப்பில் சொல்லிவிட்டேன் என்று கூறினார். ரவுடி என்று நான் குறிப்பிட்டதற்கும் வருத்தம் தெரிவித்தார்.

வரிச்சூர் செல்வம் மற்றும் காயத்ரி ரகுராம் சந்திப்பு எதார்த்தமானதல்ல. திட்டமிட்டது. அன்று காயத்ரி எங்கு சென்றார் என போலீஸூக்கே தெரியவில்லை. மேலும், எதார்த்தமாக சந்தித்தால், ரவுடியுடன் எப்படி காயத்ரி ரகுராம் போட்டோ எடுத்துக் கொண்டார். வரிச்சூர் செல்வம் அவர் சந்தித்ததை என்னிடம் ஒப்புக்கொள்கிறார், ஆனால், செய்தியாளர் சந்திப்பில் மாற்றி சொல்கிறார். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அவர் தான் என்னிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

பா.ஜ.க.,வில் மீண்டும் சேர அழைப்பு வந்ததா என கேட்கிறார்கள். மார்ச் இறுதியில் இடைநீக்க காலம் முடிகிறது. கட்சியின் வளர்ச்சி, அண்ணாமலையின் உழைப்பு சிலரால் வீணாகிறது என்று தான் சொன்னேன். என் கருத்தை நான் வெளிப்படுத்திவிட்டேன். அதை ஏற்றுக்கொள்வது ஏற்காததும் டெல்லியின் வேலை. கட்சியில் நிலவும் அதிருப்தியால் வளர்ச்சி தடைபடுகிறது அதை தெளிவுபடுத்தியுள்ளேன். அவர் வெளியில் போனால் தான் நான் கட்சிக்குள் வருவேன் என சொல்ல முடியாது. அண்ணாமலையின் பி டீம் ஆக நீங்கள் இருக்கிறீர்களா என கேட்கிறார்கள். அண்ணாமலையின் ஏ டீம் தான் நான். அவரது மெயின் டீம் நாங்கள் தான்.

காயத்ரி ரகுராம் பா.ஜ.க.,வில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிறார். நடைப்பயணம் போகப் போகிறேன். பெண்களுக்கு பாதுகாப்பு தருகிறேன் என்கிறார். போக வேண்டியது தானே. லட்சணம் என்றால் என்ன என்று தெரிந்துவிடுமே. அப்போது தான் உங்களுக்கு பின்னால் யார் இருக்கிறார் என்பது தெரியும். அண்ணாமலையை மட்டும் விமர்சனம் பண்ணிக்கொண்டு இருந்தால் உங்களால் என்ன சாதித்து விட முடியும்” எனக் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Trichy suriya explains varichur selvam and gayathri raghuram issue