சில தினங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் தனது யூடியூப் (youtube) சேனல் ஒன்றில் பா.ஜ.க குறித்தும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடப் போவது குறித்தும் ஒரு பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில் அண்ணாமலையை வைத்துக்கொண்டு பா.ஜ.க தமிழகத்தில் தங்களை எதிர்ப்பவர்களுடைய வீடுகளுக்கும், நிறுவனங்களுக்கும் அமலாக்க துறையை அனுப்பி பயமுறுத்துவதாக கூறினார்.
மேலும், கோவையில் அண்ணாமலை போட்டியிட உள்ள நிலையில் அவரிடம் சமரசம் பேசி, தி.மு.க அங்கு வலுவற்ற ஒரு போட்டியாளரை களம் இறக்க இருப்பதாகவும் பல கருத்துக்களை பேசியிருந்தார். இந்நிலையில் அந்த வீடியோவை மேற்கோள் காட்டி தமிழக பா.ஜ.க.,வின் OBC மோர்ச்சா மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா சிவா தற்பொழுது பரபரப்பு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் சட்டை துரைமுருகன் மற்றும் சூர்யா இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் பதிவாகியுள்ளது. "பா.ஜ.க பற்றி ஏன் இப்படி அவதூறாக பேசுகிறீர்கள் என்று சாட்டை துரைமுருகனிடம் கேட்க, இனி அப்படி எந்த வீடியோவும் வெளியிட மாட்டேன். எங்களுடைய ஒரே டார்கெட் தி.மு.க மட்டும் தான் என்று தலைவர் கூறியுள்ளதாகவும், இனி மற்ற கட்சியினர் பற்றி பேச வேண்டாம் என்று சீமான் கூறியதாகவும் அதில் சாட்டை துரைமுருகன் கூறுகின்றார்."
"அதேபோல விவசாயி சின்னம் நாம் தமிழர் கட்சியின் வசமிருந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், மைக் சின்னம் தருவது குறித்தும் சாட்டை துரைமுருகன், திருச்சி சூர்யாவிடம் பேசியுள்ளார். ஒரு கட்டத்தில் சவப்பெட்டி சின்னத்தை கூட வாங்கிட்டு போய்விடலாம் என்பது போல தோன்றுகிறது என்று கூறி தனது கட்சியைத் தானே அவமதித்து பேசும் வண்ணம் சர்ச்சையான வகையில் சாட்டை துரைமுருகன் பேசி இருக்கிறார்.
இந்நிலையில் அந்த ஆடியோவை தற்பொழுது வெளியிட்டு "இவரை எல்லாம் நம்பி சீமான் கட்சி நடத்துகிறார்" என்றும், நாம் தமிழர் கட்சிக்கு 2024 ஆம் ஆண்டு தேர்தலில் சவப்பெட்டி உறுதி என்றும் சூர்யா அந்த பதிவில் கூறியுள்ளார். இந்த காணொளி தற்போது வைரலாகி இருக்கின்றது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“