Advertisment

இறப்பை மறைத்து ஓய்வூதியம் பெற்ற மனைவி, மகன்; அதிர்ச்சியில் அதிகாரிகள்

2015 ஆம் ஆண்டில் இறந்த ஆசிரியர் பெயரில் ஓய்வூதியம் பெற்று வந்த மனைவி, மகன்; மோசடியை கண்டறிந்த அதிகாரிகள் காவல்துறையில் புகார்

author-image
WebDesk
New Update
ஜோதிடர் மீது 8 கோடி மோசடி புகார் : முன்னாள் முதல்வரின் மனைவிக்கு தொடர்பா?

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள மாராடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கராஜன். இவர் துறையூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் வரலாற்று ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு துறையூர் சார் நிலை கருவூலம் மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ரெங்கராஜன் கடந்த (26.11.2015) அன்று இயற்கையான முறையில் மரணமடைந்துள்ளார்.

Advertisment

இதனை இறந்த ரெங்கராஜனின் வாரிசுகளான மனைவி ஜெயக்கொடி மற்றும் மகன் ஜெயதேவன் ஆகிய இருவரும் சார்நிலை கருவூலத்திற்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்துள்ளனர். மேலும், கருவூலம் மற்றும் கணக்கு துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் உயிருடன் உள்ளனரா? என்பதை அறிய நேர்காணல் நடத்தப்படும்.

நேர்காணலுக்கு வர இயலாதவர்கள் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் இருந்து ஓய்வூதிய உயிர் வாழ் சான்று பெற்று சார்நிலை கருவூலத்தில் அளிப்பது வழக்கம். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் ஓய்வூதியர்கள் அளிக்கும் உயிர்வாழ் சான்றினை இறந்த ரெங்கராஜனின் வாரிசுகள் பல்வேறு முறைகளில் மோசடியாக அளித்து, ரெங்கராஜனின் ஓய்வூதியம் அவரது வங்கி கணக்கிற்கு தொடர்ந்து வருமாறு செய்துள்ளனர்.

இவ்வாறு வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் ஓய்வூதியத்தை ஜெயக்கொடி மற்றும் ஜெயதேவன் ஆகிய இருவரும் பல்வேறு தவணைகளில் பல்வேறு காசோலைகள் வாயிலாக கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2024 ஆம் ஆண்டு மே மாதம் வரை 49 லட்சத்து 69 ஆயிரத்து 279 வரையிலான தொகையினை அரசினை ஏமாற்றி பெற்றுள்ளனர். 

இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற நேர்காணலுக்கு ரெங்கராஜன் வராததால், சந்தேகமடைந்த கருவூல அதிகாரிகள் ரெங்கராஜனின் இருப்பிட முகவரிக்கு நேரில் சென்று விசாரணை செய்தனர். அப்போது, ரெங்கராஜன் 2015 ஆம் ஆண்டே இறந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். 

இச்சம்பவம் தொடர்பாக துறையூர் உதவி கருவூல அலுவலர் துறையூர் போலீசில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் துறையூர் போலீசார் மோசடி நடைபெற்ற விதம், மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்கள் பற்றி விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இறந்தவரின் இறப்பை மறைத்து மோசடியாக ஓய்வூதியம் பெற்று வந்தவர்கள் குறித்த தகவல் அறிந்த அதிகாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment