திருச்சி தென்னூர் உழவர்சந்தை அருகே மிகவும் பழமை வாய்ந்த அன்னார் பாக் தர்கா என்ற தர்கா செயல்பாட்டில் இருந்தது. இந்த தர்காவில் அப்பகுதி இஸ்லாமியர்கள் தினம்தோறும் வழிபாடு நடத்தி வந்தனர். இந்தநிலையில், வக்ஃப் போர்டுக்கு சொந்தமான அன்னார் பாக் தர்காவை இன்று அதிகாலை மர்ம நபர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கி விட்டனர்.
வக்ஃப் போர்டுக்கு சொந்தமான 194 செண்ட் நிலம் 400 சதுர அடியில் அமைக்கப்பட்டிருந்த அன்னார் பாக் தர்காவை இடித்த மர்ம நபர்களை உடனடியாக கைதுசெய்ய வலியுறுத்தி அந்தப்பகுதி இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து இந்த தர்காவை பராமரித்து வரும் பஷீர் அகமது என்பவர் தில்லைநகர் காவல் நிலையத்தில் தர்காவை இடித்த பத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது புகார் அளித்துள்ளார். தர்கா இடிப்பு குறித்து அறிந்த தில்லை நகர் காவல் துறையினர் உழவர் சந்தைப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதாக உத்தரவாதம் அளித்தனர். அருகில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து மூன்று நபர்களை அடையாளம் கண்ட காவல்துறையினர் அவர்களை கைது செய்ய தேடி வருகின்றனர்.
தென்னூர் பகுதியில் இஸ்லாமியர் பயன்படுத்தி வந்த தர்கா இடிக்கப்பட்ட சம்பவம் திருச்சி முழுவதும் உள்ள இஸ்லாமியர் மத்தியில் பரவியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகின்றது. இந்த இடத்தில் மோதல் சூழல் எழா வண்ணம் அதை தடுக்கும் வகையில் பெருமளவு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, தர்கா அமைந்திருக்கக்கூடிய நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil