திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் திருச்சி தஞ்சை சாலையில் பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான அணுகுசாலை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அன்பில் மகேஷ், “அணுகுசாலை அமைப்பது தொடர்பாக பல்வேறு நலச்சங்கங்களிடையே ஒருமித்த கருத்து எட்டப்படாமல் இப்பணியானது மிகவும் காலதாமதமானது.
திமுக அரசு அமைந்தவுடன் அவர்களிடம் ஒத்த கருத்து ஏற்படுத்தி பணியினை விரைவாக முடிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார்.
தொடர்ந்து, அமைச்சர் கே.என். நேரு பேசுகையில், “தேசிய நெடுஞ்சாலை 67-க்கு உட்பட்ட திருச்சி புறநகர் பகுதியில் துவாக்குடியிலிருந்து பால்பண்ணை ரவுண்டானா வரை உள்ள 14.49 கி.மீ சர்விஸ் சாலை அமைக்க 35.51 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த 2011-2012-ம் ஆண்டு நிலமதிப்பின் அடிப்படையில் ரூ.84.50 கோடிக்கு தமிழ்நாடு அரசு 29.08.2011 அன்று நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கியுள்ளது.
அதன்படி, துவாக்குடி, கூத்தப்பார், திருவெறும்பூர், அகரம், எல்லக்குடி, பாப்பாக்குறிச்சி, அரியமங்கலம், வரகனேரி, தாராநல்லூர் ஆகிய 9 கிராமங்களில் தனியார் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களுக்கு 3யு(1) அறிவிக்கை வெளியிடப்பட்டது.
கடந்த 24.05.2013 அன்று இந்திய அரசிதழில் அறிவிக்கைசெய்யப்பட்டது. கடந்த 10 ஆண்டு காலமாக நாங்கள் ஆட்சியில் இல்லாத போதும் இங்குள்ள இப்பிரச்சனையை சுமூகமாக தீர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தோம்.
ஆனாலும் பல்வேறு வழக்குகள் காரணமாக தாமதமாகியுள்ளது. தற்போது அந்த தடைகள் அனைத்தும் நீங்கி விரைவில் அணுகுசாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என நம்புகிறேன்” என்றார்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“