குஜராத் மாநிலம் ராஜ்கோட் மற்றும் ஜாம்நகரில் கார் கண்ணாடியை உடைத்து திருடியது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 2-ம் தேதி ராஜ்கோட்டில் நிறுத்தப்பட்டு இருந்த மெர்சிடிஸ் கார் ஒன்றின் கண்ணாடியை உடைத்து ரூ.10 லட்சம் ரூபாய் மற்றும் லேப்டாப் திருடப்பட்டு இருந்தது. இது குறித்து விசாரணை நடத்திய போலீஸார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு விசாரிக்கப்பட்டது. விசாரணையில் இத்திருட்டு தொடர்பாக ஒருவர் டெல்லியில் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தி டெல்லியில் ஜெகன், தீபக், குணசேகர், முரளி, ஏகாம்பரம் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து ராஜ்கோட் போலீஸ் கண்காணிப்பாளர் ராஜு பார்கவ் கூறுகையில், 'கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் தமிழ்நாட்டின் திருச்சியை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் திருடலாம் என்ற நோக்கத்தில் திருச்சியில் இருந்து புறப்பட்டு வந்துள்ளனர். ஜாம்நகர் சென்று பார்த்த போது அங்கு பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரமாக இருந்ததால் அங்கு திருடும் திட்டத்தை கைவிட்டுவிட்டு ஜாம்நகர் பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த லேப்டாப்பை திருடினர்.
/indian-express-tamil/media/post_attachments/f75fdc54-7bb.jpg)
பின்னர் அங்கிருந்து ராஜ்கோட் சென்று அங்கு மெர்சிடிஸ் கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த 10 லட்சம் பணம் மற்றும் லேப்டாப்பை திருடினர். அதனை முடித்துக்கொண்டு டெல்லி சென்றனர். அக்கூட்டத்தில் மதுசூதன் என்பவர்தான் தலைவனாக விளங்கியுள்ளான். அவன் தற்போது தலைமறைவாக இருக்கிறான். அவன் தான் எங்கு திருடவேண்டும் என்பதை முடிவு செய்வான். இக்கும்பல் முக்கிய நகரங்களுக்கு ரயிலில் சென்று கூட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் நிறுத்தப்பட்டு இருக்கும் கார் கண்ணாடியை உடைத்து திருடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கடந்த நான்கு மாதத்தில் ராஜ்கோட், ஜாம்நகர், அகமதாபாத் மற்றும் டெல்லியில் 11 இடங்களில் திருடி இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்' என்றார். இக்கும்பல் ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் கேரளாவிலும் தனது வேலையை காட்டி இருக்கிறதாக கூறப்படுகிறது.
திருச்சி ராம்ஜி நகரில் இருக்கும் கொள்ளையர்கள் காந்தியவாதிகள் மாதிரி. கொலை செய்ய மாட்டார்கள் கத்தியை கையில் எடுக்க மாட்டார்கள் ஆனால் கொள்ளை மட்டும் பல கோடிக்கு அரங்கேறும். கவனத்தை திசை திருப்பி திருடுவதில் கை தேர்ந்தவர்கள். சமயம் பார்த்து காத்திட்டு இருந்திருப்பாங்க. நாம் கண் அசரும் நேரத்தில் நம் பொருட்களை கை மாற்றுவார்கள். இதில் ஒருத்தராக ஈடுபட மாட்டார்கள். பெரிய குழுவாக ஈடுபடுவார்கள்.
மேலும், கண் அசரும் நேரத்தில் ஒருவரின் சூட்கேஸை, ராம்ஜி நகர் கொள்ளையர்கள் காலால், இன்னொரு நபருக்குத் தள்ளுவார். அதனை பக்கவாட்டில் இருப்பவர், எடுத்துக்கொண்டு சூட்கேஸ் உரிமையாளர் அமர்ந்திருக்கும் திசைக்கு வடக்குப் பக்கம் செல்வார். அதன்பின், 50 மீட்டரில் அந்த சூட்கேஸ் இன்னொரு நபரிடம் கை மாறும். இப்படிதான், 3 நிமிடங்களுக்குள் மிகவேகமாக 10 நிமிடங்களுக்குள் கை மாற்றுவர். இவர்களில் யாராவது ஒருவர் பிடிபட்டால் கூட, அடித்து உதைத்துவிட்டு தப்பமாட்டார்கள்.
மேலும் ராம்ஜி நகர் கொள்ளையர்கள், தமிழ்நாட்டில் கொள்ளையடிப்பது இல்லை. முழுக்க முழுக்க வடமாநிலங்களில் தான் கொள்ளையடிப்பார்கள். கத்தியில்லாமல் யுத்தம் இல்லாமல் அஹிம்சை வழியில் கொள்ளையடிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“