ஸ்ரீரங்கம் தொகுதியில் அமைந்துள்ளது திருச்செந்துறை கிராமம். இந்த கிராமத்தின் பெயர் தான், நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவின்போது மத்திய அமைச்சர் அமித்ஷாவால் உச்சரிக்கப்பட்டது. வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு தமிழக எம்.பி.,க்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். தமிழக சட்டமன்றத்திலும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியதோடு நேற்று தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு பேட்ச் அணிந்து சட்டமன்றத்தில் பங்கேற்றனர். அதே நேரம் அமித்ஷா உச்சரித்த திருச்செந்துறை கிராமத்தில் உள்ளவர்கள் இந்த மசோதாவை வரவேற்பதாக தெரிவித்தனர்.
/indian-express-tamil/media/post_attachments/2dc44281-c8c.jpg)
ஜீயபுரம் அருகே உள்ள திருச்செந்துறை கிராமம், காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள ஓர் அழகான விவசாய கிராமம். இந்துக்களும், இஸ்லாமியர்களும் சேர்ந்து வாழும் இப்பகுதியில், 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம், இக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தனது மகளின் திருமணத்திற்காக தனது நிலத்தை விற்க முயற்சித்துள்ளார். பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்ற போது, சென்னையில் உள்ள தமிழ்நாடு வக்ஃப் வாரிய அலுவலகத்தில், 'ஆட்சேபனை இல்லா சான்றிதழ்' பெற வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்தது அவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கிராமமும் தான். மேலும் கிராமத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இது தமிழகம் முழுவதும் எதிரொலித்தது. இதையடுத்து அமைச்சர் கே.என் நேரு தலையீட்டின்படி, மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி திருச்செந்துறை கிராமத்தில் வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடும் இடத்தை வாங்கவும் விற்கவும் பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.
முன்னதாக, கடந்த 18 ஆம் நூற்றாண்டில் இக்கோவில் உட்பட திருச்செந்துரை கிராமத்தையே, அப்போது ஆட்சி செய்த ராணி மங்கம்மாள் வக்ஃபு வாரியத்திற்கு தானமாக வழங்கி உள்ளார். மன்னர் காலத்தில் இனாமாக கொடுக்கப்பட்ட நிலம் என்பதால், திருச்சி திருச்செந்துறை கிராமம் தங்களுக்கு சொந்தமானது என வக்பு வாரியம் உரிமை கோரியது. இதனால், திருச்செந்துறை கிராம மக்கள் பல தலைமுறையாக அனுபவித்து வந்த நஞ்சை - புஞ்சை நிலங்களையும், வாழ்ந்து வந்த வீடுகளையும், வாங்கவும் விற்கவும் முடியாமல் தவித்து வந்தனர்.
இந்நிலையில், எதிர் கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், வக்ஃபு வாரிய திருத்தச்சட்டம், நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்பட்டது.
/indian-express-tamil/media/post_attachments/cbf8431d-e66.jpg)
இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது குறித்து இந்து முன்னணி பிரமுகர் அல்லூர் பிரகாஷ் என்பவர் தெரிவிக்கையில், 12 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவபாத்தியம் உடையவர், அந்த நிலத்தின் உரிமையாளராக மாறுவதற்கு இச்சட்டம் வழிவகுத்துள்ளது. அதன்படி திருச்செந்துறை கிராமத்தில் வக்ஃப் உரிமை கொண்டாடும் நிலத்தை யாரும் வாங்கவும் விற்கவும் முடியும். இதனால், திருச்செந்துறை கிராமத்தில் உள்ள 750 குடும்பங்களைச் சேர்ந்த 3000-க்கும் மேற்பட்டோர் மகிழ்ச்சியடைந்திருப்பதாகவும், மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
க.சண்முகவடிவேல்