க.சண்முகவடிவேல்
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெல் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பெல் நிறுவன நுழைவுவாயில் முன் புதிதாக அமைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் திரு உருவ வெங்கல சிலையை தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்றிரவு திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியை வரவேற்று பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள், கொடிகள் பிரமாண்டமாக வைக்கப்பட்டது. அந்த வகையில், விழா நடக்கும் இடத்து அருகே, வைக்கப்பட்ட பேனர்களுக்கு அனுமதி பெறவில்லை எனக்கோரி அ.தி.மு.க-வை சேர்ந்த திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்கேடி கார்த்திக், கூத்தைப்பார் பேரூர் கழக செயலாளர் முத்துக்குமார், துவாக்குடி நகர செயலாளர் எஸ் பி பாண்டியன், மாவட்ட நிர்வாகி சுபத்ரா தேவி, அதிமுக நிர்வாகிகள் பாலமூர்த்தி, பொய்கைகுடி முருகா உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக, சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவினர் உற்சாகமாக வரவேற்றனர். இதற்காக திருச்சி புதுக்கோட்டை சாலையில் கட்சி கொடியை நட்டனர். அப்போது அங்கு ரோந்து வாகனத்தில் வந்த விமான நிலைய காவல்துறையினர் அதிமுகவினரிடம் அங்கு கட்சி கொடிகளை நடக்கூடாது என தெரிவித்தனர்.
இது தொடர்பாக அதிமுகவினர்க்கும், காவல்துறையினர்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பு நிலவிய நிலையில், தற்போது அதிமுக பிரமுகர்கள் எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil