குடி குடியை கெடுக்கும், மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என மது பாட்டில்களில் வாசகங்கள் இடம் பெற்று இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் குடிமகன்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். அப்படி அடிமையானவர்கள் தற்பொழுது சிறார்கள் கூட போதை பொருளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இளைய சமுதாயம் சீரழிந்து வருவதுடன் அவர்களின் குடும்பமும் சீரழிந்து வருகிறது.
மதுபானக் கடைகள் குறித்த நேரத்தில் மட்டுமே செயல்படும் நிலையில், கள்ள சந்தையில் கூடுதல் விலைக்கு மதுவை வாங்கி பலர் பாரில் அமர்ந்தும், சிலர் வீட்டிற்கு வாங்கிச் சென்றும் மது அருந்துகின்றனர். ஆனால், சிலர் பொது இடம், சாலை ஓரம், விவசாய நிலம், பேருந்து நிலையம் இப்படி பொது இடங்களில் அமர்ந்து மது குடிக்கின்றனர்.
மேலும் மது அருந்திய பாட்டில்களை அந்தப் பகுதியில் தூக்கி வீசுவதும், சாலையோர குழாய்களை உடைத்து எறிவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், திருவெறும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரன் தனது காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோரம் மற்றும் வயல்வெளிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் திறந்த வழியில் மதுபானம் அருந்துபவர்களை பிடித்து எச்சரிப்பதோடு மட்டுமல்லாமல், நூதன தண்டனை வழங்கும் விதமாக ஒரு நபர் 5 திருக்குறள் சொல்ல வேண்டும். அப்படி சொல்லாதவர்களின் செல்போன் மற்றும் வாகனத்தை காவல்நிலையம் எடுத்துச் செல்வதோடு காவல் நிலையத்திற்கு வந்து 5 திருக்குறளை சொல்லி தங்களது பொருளை வாங்கிச் செல்லுங்கள் என்று நூதன தண்டனை வழங்குகிறார். மேலும் இதுபோன்று திறந்தவெளியில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் மது அருந்த மாட்டோம் என எழுதிக் கொடுத்துச் செல்ல வேண்டும் என எச்சரித்து வருகிறார்.
இப்படி பொதுவெளியில் மது அருந்தி போலீசாரிடம் சிக்கி காவல் நிலையத்திற்கு வரும் மதுப்பிரியர்கள் மீண்டும் பொது இடத்தில் அமர்ந்து மது அருந்தினால் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை அறிந்து பொது இடத்தில் அமர்ந்து மது அருந்துவதை தவிர்க்க நினைக்கின்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்