திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே கிளிக்கூடு கிராமத்தில் நடந்த கபடி போட்டி தகராறில் பிரபல ரவுடி அசோக்குமார் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், அவரது இரு மகன்கள் உட்பட 5 பேரை நம்பர் ஒன் டோல்கேட் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கிளிக்கூடு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பாண்டியனின் மகன் அசோக்குமார். இவர் மீது நம்பர் ஒன் டோல்கேட் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2022-ம் ஆண்டு, முன்பகை காரணமாக பிரகாஷ் என்பவரை தனது நண்பர்களுடன் சேர்ந்து அசோக்குமார் கொலை செய்த வழக்கும் அதே காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.
கடந்த மே 23 முதல் 26 வரை, அசோக்குமாரால் கொல்லப்பட்ட பிரகாஷின் நினைவாக "நம்பர் ஒன் பாய்ஸ் குழு" என்ற பெயரில் கிளிக்கூடு கிராமத்தில் கபடி போட்டி நடைபெற்றது. இந்நிலையில், மே 29 அன்று, அசோக்குமார் தனது நண்பர்களுடன் அரிவாளுடன் வந்து, "கபடி போட்டியா நடத்துகிறீர்கள்?" எனக் கேட்டு ஊர் மக்களை மிரட்டியுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மருதையின் மகன் சின்ன அப்பு (எ) பிரகாஷ் என்பவரை அசோக்குமார் தரப்பினர் தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கபடி போட்டியை நடத்திய முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பாலகிருஷ்ணனின் மகன் பிரவீன் (எ) சின்னத்தம்பியிடம் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரம், அசோக்குமார் பாலகிருஷ்ணன் வீட்டின் முன்பு அரிவாளுடன் நின்று தகாத வார்த்தைகளால் பேசி வம்பு இழுத்ததாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே அசோக்குமார் தரப்பினரால் பிரகாஷ் தாக்கப்பட்டதால் கோபத்தில் இருந்த சின்னத்தம்பி, அசோக்குமார் வீடு தேடி வந்து வம்பு இழுத்ததைப் பயன்படுத்திக் கொண்டு, கட்டிட காண்ட்ராக்டர் வேலை செய்து வரும் தனது அண்ணன் வேலாயுதம் (எ) பிரபு, அவரது நண்பன் மோகன், சின்ன அப்பு (எ) பிரகாஷ், மற்றும் சின்னத்தம்பியின் தந்தை, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஐந்து பேரும் சேர்ந்து அசோக்குமாரை வெட்டியதாகக் கூறப்படுகிறது. அவர்களைத் தடுக்க முயன்ற பொன்னுச்சாமியின் மகன் புவியரசன் என்பவருக்கும் இதில் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் அசோக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நம்பர் ஒன் டோல்கேட் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அசோக்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார், அசோக்குமாரைக் கொலை செய்த வழக்கில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் உட்பட ஐந்து பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.