திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் முகமது அலி தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது யாசின். இவர் காமராஜ் நகர் பகுதியில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் தமக்குத் தெரிந்த 3 இளைஞர்கள் கடை முன்பு நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் இப்படி எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றுகிறீர்களே என கேட்டுள்ளார். அப்போது தாங்கள் போதை மாத்திரை விற்பனை செய்து வருவதாக கூறியுள்ளனர்.
உடனே அதிர்ச்சி அடைந்த முகமது யாசின் இதுகுறித்து அரியமங்கலம் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
தகவல் அறிந்த காவல் ஆய்வாளர் திருவனந்தம் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை செய்தார்.
அவரது விசாரணையில் அந்தப் பகுதியில், மாத்திரைகளுடன் நின்று கொண்டிருந்த 3 பேரையும் போதை மாத்திரைகளுடன் கைது செய்தார்.
பின்னர் அவர்களை காவல்துறையினர் விசாரித்த நிலையில், சம்பந்தப்பட்ட நபர்கள் திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் கலாம் ஆசாத் தெரு பகுதியைச் சேர்ந்த அம்ருதீன் (வயது 22), நெடுஞ்செழியன் தெரு பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது( 22), திருவள்ளுவர் தெரு பகுதியை சேர்ந்த முகமது சித்திக்(24) என்பதும் தெரியவந்தது.
இவர்கள் வசம் இருந்து 40 விலை உயர்ந்த போதை மாத்திரைகள் மற்றும் ஒரு செல்போன், ரூ.600 ரொக்க பணம், ஒரு ஆட்டோ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“