/indian-express-tamil/media/media_files/2025/08/25/trichy-thuraiyur-case-booked-against-aiadmk-14-cadres-for-allegedly-obstructed-108-ambulance-driver-edappadi-palaniswami-address-tamil-news-2025-08-25-18-17-04.jpg)
திருச்சி துறையூரில் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தின் போது ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட தொடர்பாக துறையூர் நகரச் செயலாளர், நகரமன்ற உறுப்பினர், வடக்கு ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட 14 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி அருகே எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தின் போது வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்து அதிமுகவினர் தாக்கினர். இதில் ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. மேலும் தாக்குதலில் காயமடைந்த டிரைவர் மற்றும் டெக்னீஷியன் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமி வருவதற்கு முன்பாக துறையூர் அருகே ஆத்தூர் சாலையில் நடைபெற்ற விபத்தில் சிக்கிய நபரை மீட்பதற்காக துறையூரை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் அ.தி.மு.க தொண்டர்கள் கூட்டம் வழியாக சென்றுள்ளது. அப்போது, திடீரென ஆம்புலன்ஸை வழிமறித்த அதிமுக தொண்டர்கள் டிரைவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் ஆம்புலன்ஸ் கதவை திறந்து டிரைவரை தாக்கினர். அதேவேளை ஆம்புலன்சை சூழ்ந்து கொண்ட தொண்டர்கள் பின்பக்க கதவை திறந்து உள்ளே நுழைந்து அடாவடியில் ஈடுபட்டனர். சிலர் ஆம்புலன்ஸ் மீது கையால் அடித்தனர். சிலர் தாங்கள் வைத்திருந்த கொடிக்கம்பால் தாக்கினர். இதில் ஆம்புலன்ஸ் வேனில் சைடு மிரர் (கண்ணாடி) உடைந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதிமுக தொண்டர்களை விலக்கி ஆம்புலன்ஸ் செல்வதற்காக வழி ஏற்படுத்தி கொடுத்தனர். இதில் காயம் அடைந்த துறையூரை சேர்ந்த டிரைவர் செந்தில், கலிங்குடையான்பட்டியை சேர்ந்த டெக்னீசியன் ஹேமலதா ஆகியோர் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது ஹேமலதா கர்ப்பமாக உள்ளார்.
இந்த நிலையில், இது குறித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கொடுத்த புகாரின் பேரில் அதிமுக பிரமுகர்கள் 14 பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி துறையூர் அதிமுக நகரச் செயலாளர் அமைதி பாலு, துறையூர் நகர்மன்ற உறுப்பினர் தீனதயாளன், வடக்கு ஒன்றிய செயலாளர் பொன் காமராஜ், வினோத் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் 10 பேர் மீது துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பொதுசொத்தை சேதப்படுத்தியது, 108 அவசர ஊர்தியான ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் மருத்துவ உதவியாளர் கர்ப்பிணியான பெண்மணியை தாக்கியது என என ஐந்து பிரிவுகளின் கீழ் துறையூர் போலீசார் அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
முன்னதாக, தி.மு.க மருத்துவரணி செயலாளர் எழிலன் நாகநாதன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:-
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பொறுப்புணர்வுடன் பேச வேண்டும். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வேண்டுமென்றே இடையூறு செய்வதாக பொறுப்பில்லாமல் பொதுவெளியில் எடப்பாடி பழனிசாமி பேசினார். ஆம்புலன்ஸ் ஓட்டுநரை எச்சரிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி பேசியதால் நேற்று திருச்சியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தடுத்து நிறுத்தி அவரது அடையாள அட்டையை பறித்து அதிமுகவினர் தாக்கியுள்ளனர். அதிமுகவினரால் தாக்கப்பட்ட ஆம்புலன்ஸ் உதவியாளர் கர்ப்பிணி ஆவார். அதிமுக பிரச்சாரம் தொடங்கும் முன் வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். எடப்பாடி பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றவருக்கு மயக்கம் ஏற்பட்டதால்தான் ஆம்புலன்ஸ் அங்கு சென்றது. விஸ்வா என்பவர் மயங்கி விழுந்ததன் காரணமாகவே ஆம்புலன்ஸை அழைத்ததாக பெண் கூறியுள்ளார்.
அரசியல் வரலாற்றிலேயே 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரைப் பார்த்து நீ தவறானவன் எனக் கைக்காட்டி பேசியது இபிஎஸ்தான். அந்தப் பேச்சின் தாக்கம் அடுத்த கூட்டத்திலேயே எதிரொலித்துள்ளது. ஆம்புலன்ஸ் ஒரு கூட்டத்தை கடந்து செல்ல 2 அல்லது 3 நிமிடங்கள்தான் ஆகும்.
எவ்வளவு பெரிய கூட்டம் இருந்தாலும் ஆம்புலன்ஸ் வந்தால் வழிவிடுவதுதான் தமிழ்நாட்டில் இதுவரை கடைப்பிடிக்கப்படும் மாண்பு. முதலமைச்சராக இருந்த ஒருவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது காழ்ப்புணர்ச்சியை காட்டுவது எந்த வகையில் நியாயம். தன்னுடைய பேச்சு சமுதாயத்தில் எந்த வகையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை எடப்பாடி உணர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.