க.சண்முகவடிவேல்
Trichy: திருநெல்வேலி - சென்னை இடையே வருகிற 24-ம் தேதி முதல் ‘வந்தே பாரத்' ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சேவையை காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.‘வந்தே பாரத்' எனப்படும் அதிவிரைவு ரயில்களின் பயண நேரம் குறைவு என்பதால் பயணிகள் மத்தியில் இந்த ரயில்களுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. ஜி.பி.எஸ் டிராக்கர் வசதி, கேமரா வசதி, ஏசி வசதி என அனைத்தும் இந்த ரயிலில் உள்ளன. சென்னை - கோவை மற்றும் சென்னை- மைசூரு இடையேயான 'வந்தே பாரத்' ரயில்கள் தமிழகம் வழியே இயங்கி வருகின்றன.
தமிழகத்தின் 3-வது 'வந்தே பாரத்' ரயிலாகவும், தென்தமிழகத்தின் முதல் 'வந்தே பாரத்' ரயிலாகவும் சென்னை- நெல்லை இடையே இயக்கப்பட உள்ள புதிய ரயிலை வரும் 24-ம் தேதி காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகளை திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த், முதுநிலை வணிக மேலாளர் ரவி பிரியா, முதுநிலை கோட்ட இயக்க மேலாளர் பிரசன்னா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். தொடக்க விழாவுக்கான மேடை அமைக்கும் இடம், ரயில் வந்து செல்லும் நடைமேடை, ரயில் பராமரிப்பு பணி மேற்கொள்ளக் கூடிய பிட் லைன், ரயில்வே முன்பதிவு கவுன்ட்டர்கள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் கூறியதாவது:-
திருநெல்வேலி - சென்னை 'வந்தே பாரத்' ரயிலை வரும் 24-ம் தேதி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு 19-ம் தேதி இரவு தெற்கு ரயில்வேக்கு கிடைத்தது. அன்றைய தினம் 9 'வந்தே பாரத்' ரயில்களை பிரதமர் காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார். அதில் திருநெல்வேலி - சென்னை இடையேயான 'வந்தே பாரத்' ரயிலும் ஒன்று. இந்த ரயில் முதற்கட்டமாக விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலுக்கான கட்டணம் குறித்து ரயில்வே நிர்வாகம் விரைவில் அறிவிக்கும். திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தை புனரமைக்கும் பணி விரைவில் தொடங்கும்.
சென்னை- திருநெல்வேலி 'வந்தே பாரத்' ரயில் 8 பெட்டிகளை கொண்டிருக்கும். அதில் ஒரு பெட்டி வி.ஐ.பி.க்களுக்காக ஒதுக்கப்படும். 660 கிலோமீட்டர் தூரத்தை இந்த ரயில் 8 மணி நேரத்தில் கடக்கும். காலை 6 மணிக்கு திருநெல்வேலியில் புறப்பட்டு, மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும். மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும்.' என்றார்.
நெல்லையிலிருந்து கிளம்பும் வந்தே பாரத் ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயிலுக்கான டிக்கெட் ரூ.1400 முதல் ரூ.1500 வரை வசூலிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அதேபோல் எக்ஸிக்யூட்டிவ் சேர் காரில் ரூ.3000 வரை டிக்கெட் விற்பனை இருக்கும் என்றும் தெரிகிறது. மேலும் உணவு வேண்டுமானால் அதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்த ரயில் முதற்கட்டமாக 8 பெட்டிகளுடன் தொடங்கப்படுகிறது. இதன் பிறகு பெட்டிகள் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. டெல்லி வரை செல்லும் வந்தே பாரத் ரயிலில் பெர்த் வசதி ஏற்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில்கள் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் பயணிக்கிறது. இதனால் பயண நேரம் குறைந்து மக்கள் நிம்மதியாகவும் விரைவாகவும் பயணிக்கலாம். இதுவரை எந்த வந்தே பாரத் ரயிலிலும் படுக்கை வசதி இல்லாத நிலையில் இந்த நெல்லை-சென்னை வந்தேபாரத் ரயிலில் படுக்கை வசதி கிடைக்குமா என பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்; 550 கி.மீ தூரத்திற்கு மேல் பயணிக்கும் வந்தே பாரத் ரயில்களுக்கு மட்டும் படுக்கை வசதி மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர். அதன்படி, சென்னை- நெல்லைக்கு தோராயமாக 648 கி.மீ.தூரம் உள்ளது. சென்னை டூ கோவை 495 கி.மீ. தூரமும் கொண்டது. அது போல் சென்னை டூ மைசூரும் 496 கி.மீ தூரம் உள்ளது. சென்னை - விஜயவாடா இடையே 383 கி.மீ. மட்டுமே உள்ளது.
சென்னை - நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் 550 கீ.மீ தூரத்திற்கு மேல் இருப்பதால் இந்த ரயிலுக்கு படுக்கை வசதி கிடைக்கும் எனத் தெரிகிறது. வரும் 24 ஆம் தேதி இல்லாவிட்டாலும், போகப்போக படுக்கை வசதிகள் அறிமுகப்படுத்த வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது. ஏனெனில் இந்த ரயில் தொடர்ச்சியாக 8 மணி நேர பயணத்தை மேற்கொள்வதால் படுக்கை வசதிக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.
முன்னதாக, நெல்லை - சென்னை இடையே வரும் 24 ஆம் தேதி முதல் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. சோதனை ஓட்டமாக திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் வந்த வந்தே பாரத் ரயிலை திருச்சி ரயில்வே மண்டல கோட்ட மேலாளர் அன்பழகன் தலைமையிலான அதிகாரிகள் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.