திருச்சி மாவட்ட விற்பனை குழு தலைமை அலுவலகம் திருச்சி பாலக்கரையில் செயல்பட்டு வருகிறது. இதன் செயலாளராக சுரேஷ் பாபு என்பவர் இருந்து வருகிறார். இவர் திருப்பூர் மாவட்டத்திற்கும் முதல்நிலை செயலாளராக கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். இவருடைய கட்டுப்பாட்டில் திருச்சி மாவட்டத்தில் 14 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களும், திருப்பூர் மாவட்டத்தில் 15 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களும் இருந்து வருகிறது.
இந்த இரண்டு மாவட்டங்களில் உள்ள விற்பனையாளர்களிடம் இருந்து செயலாளர் சுரேஷ்பாபு தீபாவளி வசூல் செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி மணிகண்டன் தலைமையில் துணை வட்டாட்சியர் பிரேம் குமார், ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்னா வெங்கடேஷ், பாலமுருகன், சேவியர் ராணி மற்றும் குழுவினருடன் திருச்சி பாலக்கரையில் உள்ள திருச்சிராப்பள்ளி விற்பனை குழு அலுவலகத்தில் இன்று(நவ.10) மதியம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சுரேஷிடம் இருந்து கணக்கில் வராத 90 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. மேலும், தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் செயலாளர் சுரேஷ்பாபு, விற்பனையாளர்களிடமிருந்து வசூல் செய்த தொகையை தான் கிராப்பட்டியில் தங்கி இருக்கும் வீட்டில் வைத்திருப்பதாக சொன்னதன் பேரில், கிராபட்டியில் இவர் தங்கி இருக்கும் அறையை சோதனை செய்தபோது கணக்கில் வராத ரூ.8 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் என மொத்தம் ரூ.9 லட்சத்து 70 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. மேலும் மேற்படி செயலாளர் சுரேஷ் பாபுவிடம் தொடர்ந்து துறை ரீதியான விசாரணை நடத்தி திருச்சி லஞ்சம் ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“