Advertisment

திருச்சியில் ரூ.600 கோடி மதிப்பில் டைடல் பூங்கா அமைக்க டெண்டர்: 10,000 இளைஞர்களுக்கு வேலை

திருச்சி பஞ்சப்பூரில் ரூ.600 கோடியில் டைடல் பார்க் அமைப்பதற்கான வடிவமைப்பு மற்றும் ஆலோசனை வழங்கும் நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளதையடுத்து திருச்சி இளைஞர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

author-image
WebDesk
New Update
Panjapur.jpg

தமிழகத்தின் மையப்பகுதியாகவும், உலகத்தரம் நிறைந்த கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், உலகத்தரம் வாய்ந்த விமான நிலையம் கொண்ட பகுதியாகவும், பரந்த நிலப்பரப்பை கொண்ட பகுதியாகவும், எளிமையான தகவல் தொடர்பு மற்றும் குறைந்த செலவில் தென்னகத்தை இணைக்கும் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து வசதிகள் கொண்ட பகுதியாக திருச்சி விளங்குவதால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை திருச்சி கவர்ந்திருக்கின்றது. இதனால் சென்னை, கோவையை அடுத்து திருச்சி மாநகரில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை தொடங்க பல்வேறு ஐ.டி., நிறுவனங்கள் முன்வந்துள்ளன. 

Advertisment

ஏற்கனவே திருச்சி புதுக்கோட்டை சாலையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் நவல்பட்டில் ஒரு ஐ.டி.பார்க் முழு வீச்சில் இயங்கி வருகின்றது. இங்கு ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். மேலும், பல்வேறு தனியார் நிறுவனங்களும், திருச்சியில் தங்களது தொழில் நிறுவனங்களை தொடங்கி வருகின்றன. திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மேலும் வேலைவாய்ப்பினை உருவாக்கும் முயற்சியில் திருச்சியை பொருளாதார ரீதியாக வளர்ச்சியடையச்செய்யும் வகையிலும் ரூ.600 கோடி மதிப்பீட்டில் எல்காட் மற்றும் டிட்கோ நிறுவனங்கள் இணைந்து நடத்தும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் நிறுவனங்களின் மையமான "டைடல் பார்க்" அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

Trichy3.jpg

இதைத்தொடர்ந்து திருச்சியில் "டைடல் பார்க்" அமைக்க வாய்ப்புள்ள இடங்களை கடந்த மார்ச் மாத இறுதியில் சென்னை டைடல் பார்க் நிறுவன அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் பார்வையிட்டனர். அதன்பிறகு, திருச்சி-மதுரை சாலையில் 14 ஏக்கர் நிலம் கேட்டு டைடல் பார்க் சார்பில் திருச்சி மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதன்பேரில், தற்போது ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், காய்கறி வணிக வளாகம் என பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் பஞ்சப்பூரிலேயே மாநகராட்சிக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலத்தை வழங்க மாநகராட்சிக் கூட்டத்தில் ஒருமித்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
 
இதனையடுத்து இப்பணிகள் அடுத்தகட்டமாக 10 லட்சம் சதுர அடியில் டைடல் பார்க் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த திட்ட வடிவமைப்புக்கான நிறுவனத்தை தேர்வு செய்யும் பணியினை டைடல் பார்க் நிறுவனம் தொடங்கியிருக்கின்றது. இதுகுறித்து டைடல் பார்க் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், "திருச்சியில் பஞ்சப்பூர் பகுதியில் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் முதற்கட்டமாக 5.5 லட்சம் சதுர அடியில் டைடல் பார்க் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக "டைடல் பார்க்" அமைப்பதற்கான வடிவமைப்பு மற்றும் பொறியியல், திட்ட மேலாண்மை ஆலோசனைகளை வழங்கும் நிறுவனங்கள் தேர்வு நடைபெறவிருக்கின்றது. 

Trichy4.jpg

இதற்கான தகுதியான ஆலோசனை நிறுவனங்கள் தங்களது பரிந்துரைகளை அக்டோபர் 26-ம் தேதிக்குள் கொடுக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. அந்த டெண்டர் அடிப்படையில் வடிவமைப்பு மற்றும் ஆலோசனை வழங்கும் நிறுவனம் அக்டோபரில் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் 2024 மார்ச் மாதத்திற்குள் வடிவமைப்பினை இறுதி செய்து தர பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்த வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டவுடன் கட்டமைப்பு, கட்டுமானப் பணிகள் தொடங்கி 2 ஆண்டுகளில் நிறைவடையும் என்றார்.
 
திருச்சியில் சென்னைக்கு அடுத்தப்படியாக "டைடல் பார்க்" அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், டெல்டா மாவட்ட இளைஞர்களிடையும் பெரும் வரவேற்பையும், எதிர்ப்பார்ப்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கின்றது.  இதுகுறித்து பொறியியல் பட்டதாரி ஒருவர் தெரிவிக்கையில், நாங்க திருச்சியில படிச்சுட்டு, சென்னை, பெங்களூர், மும்பை, ஹைதரபாத் என பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து செல்லக்கூடிய நிலைதான் தொடர்கிறது. அங்குள்ள கட்டுமானம் மற்றும் சாலைகள், ரயில் வழித்தடங்கள் இருப்பதுபோல் இனி திருச்சியிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் சூழலில் நாங்கள் இடம்பெயர்ந்து பணியாற்றுவதைவிட சொந்த ஊரிலேயே ஐ.டி.நிறுவனத்தில் பணியாற்றுகின்றேன் எனப் பெருமையாக சொல்ல முடியும்.

இந்தியாவில் உள்ள பிற ஐ.டி. பார்க்குகள் போல் திருச்சியிலும் பிரம்மாண்டத்தை ஐ.டி. பார்க் உருவாக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. உலகளவில் நமது சொந்த ஊரான திருச்சியில் டைடல் பார்க் நிறுவப்படுவதன் மூலம், திருச்சியும் ஐ.டி., பணிகளில் கொடிகட்டிப் பறக்கும் என்பதில் ஐயமில்லை என்றார்.

செய்தி: க. சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment