/indian-express-tamil/media/media_files/2025/09/25/trichy-tn-minister-anbil-mahesh-poyyamozhi-on-panangadai-poem-book-release-tamil-news-2025-09-25-21-41-01.jpg)
"பனங்காடையின் பாடல்கள் என்ற இந்த நூல் தமிழருடைய அடையாளம். பனைமரத்தில் இருக்கக்கூடிய பனங்காடை பறவை தமிழ் இனத்திற்கு உரிய பறவை," என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் "பனங்காடையின் பாடல்கள்" நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலர் தந்தை சூ.லூயிஸ் பிரிட்டோ தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு கி. சதீஸ்குமரன் எழுதிய "பனங்காடையின் பாடல்கள்" நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியது வருமாறு:-
தமிழர் மரபு சங்க இலக்கிய மரபு, சங்க இலக்கியம் என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் எழுதிய புலவர்களின் பாடல்களை தொகுத்து நூலாக படைப்பாக வெளியிட்ட பிறகுதான் அது அனைவருக்குமான மக்கள் இலக்கியமாக மாறியது, அந்த அடிப்படையில் நாட்டுபுறப் பாடல் வடிவத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த நூல் பல்வேறு தலைப்புகளில் குறிப்பாக சமூக மாற்றத்திற்கு உரிய தலைப்புகளில் தமிழ், தமிழின் சிறப்புகள், இயற்கை, சமூக முன்னேற்றம், பெண்களுக்கு எதிரான வன்முறை விழிப்புணர்வு, போதை எதிர்ப்பு விழிப்புணர்வு, சமூக மாற்றத்திற்கு தொண்டாற்றிய ஆளுமைகள், குறிப்பாக பெரியார், கலைஞர், இன்றைய முதல்வர் மற்றும் நம்முடைய அரசின் திட்டங்கள் குறித்தும் சமூக மாற்றத்திற்கான விழிப்புணர்வு பாடல்களை எழுதி மெட்டமைத்து தொகுப்பாக வெளியிட்டு சிறப்பு சேர்த்துள்ள நூலாசிரியர்கள் பேராசிரியர் கி.சதீஸ்குமரன், மெட்டமைத்து பாடிய ஆகாஷ் ஆகியோரை பாராட்டுகிறேன்.
பனங்காடையின் பாடல்கள் என்ற இந்த நூல் தமிழருடைய அடையாளம். பனைமரத்தில் இருக்கக்கூடிய பனங்காடை பறவை தமிழ் இனத்திற்கு உரிய பறவை, அந்த அடிப்படையில் ஒரு போர்க்குணம் மிக்க இந்த மண்ணை, மண்ணின் பண்பாட்டை மக்களுக்கான பண்பாட்டை, மக்களை நோக்கி கலையை கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த நூல் மிகுந்த வரவேற்புக்கு உரியது, பாராட்டுக்குரியது. தொடர்ந்து இது போன்ற நிறைய நூல்கள் உருவாக்கப்பட வேண்டும், அதை மக்களும், மாணவர்களும் சரியாக பயன்படுத்திக் கொண்டு சமூக மாற்றத்தை நோக்கி நாம் நகர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கவிஞர் கோ.கலியமூர்த்தி, மணவை.தமிழ் மாணிக்கம், பேராசிரியர் தி.நெடுஞ்செழியன், நாட்டுப்புற கலைஞர் வளப்பக்குடி வீரசங்கர், மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளரும், தண்ணீர் அமைப்பு செயல் தலைவருமான கே.சி.நீலமேகம், செல்வி. சண்முகவள்ளி, வரகனேரி என்.கே.இரவிச்சந்திரன், உலக சிலம்ப இளையோர் சம்மேளனம் ஆர்.மோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்கள். முன்னதாக, நூலாசிரியர் கி. சதீஸ்குமரன் ஏற்புரை வழங்க, முடிவில், மக்களிசைப் பாடகர் சா.ஆகாஷ் நன்றி கூறினார். நிகழ்வை சுஜதா, சஞ்சய் குமார் தொகுத்து வழங்கினர்.
செய்தி: க. சண்முகவடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.