கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள திருக்காம்புலியூர் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் இன்று (பிப்.11) திடீரென விரிசல் ஏற்பட்டது. இதனை அப்பகுதி வழியாக சென்ற ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் கலியமூர்த்தி எனபவர் கண்டறிந்தார்.
அதன்பேரில், தண்டவாள பராமரிப்புப் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அப்போது, எர்ணாகுளம் - காரைக்கால் விரைவு ரயில் அவ்வழியாக வந்து கொண்டிருந்ததால், சுமார் 100 மீட்டர் முன்பாகவே அந்த ரயில் நிறுத்தப்பட்டது. இதன் மூலம் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதேபோல், வாஸ்கோடகாமா - வேளாங்கண்ணி விரைவு ரயில் மாயனூர் ரயில் நிலையத்திலும், கரூர் திருச்சி முன்பதிவில்லா விரைவு ரயில் வீரராக்கியம் ரயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தை ரயில்வே ஊழியர்கள் தற்காலிகமாக சீரமைத்தனர். அதன் பின்னர், எர்ணாகுளம் - காரைக்கால் ரயில் 45 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. மற்ற ரயில்கள் சுமார் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டன. மேலும், அவ்வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் மெதுவாக இயக்கப்படுகின்றன.
செய்தி - க. சண்முகவடிவேல்