திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தினந்தோறும் சிங்கப்பூர், துபாய், இலங்கை, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல் சென்னை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு உள்நாட்டு விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அதனால் சென்னைக்கு இணையாக திருச்சி விமான நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இந்த நிலையில், இன்று புதன்கிழமை திருச்சி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு குறித்த நேரத்திலிருந்து ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பாகவே புறப்பட்ட விமானத்தால் பயணிகள் அவதிக்குள்ளாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு இன்று 4.30 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் செல்ல இருந்தது. அந்த விமானத்தில் செல்வதற்காக 180 பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், சிங்கப்பூர் விமானம் இன்று மதியம் 3 மணிக்கு புறப்பட்டு சென்று விட்டதாகவும், இதனால் முன்பதிவு செய்ததில் 20 பேர் விமானத்தை தவறவிட்டு விட்டதாகவும் கூறி விமானத்தை தவறவிட்டவர்கள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து விமானத்தை தவறவிட்டவர்களுக்கு மாற்று ஏற்பாடாக அவர்கள் கேட்கும் நாளன்று டிக்கெட் மாற்றி கொடுக்கப்பட்டது. மேலும், சிங்கப்பூர் செல்ல விருப்பம் இல்லாதவர்களுக்கு டிக்கெட் ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கான டிக்கெட் தொகை முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து விமான நிலையத்தில் விமானத்தை தவறவிட்ட பயணிகள் தெரிவிக்கையில், "நாங்கள் வெளியூரிலிருந்து வருகிறோம், எங்களுக்கு எந்த வித தகவலும் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை. இங்கு வந்து கேட்ட பின்பு தான் விமானம் ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பாகவே புறப்படுகிறது என்பதை தெரிந்து கொண்டோம். எல்லோரும் வேலைக்காக அங்கு செல்கிறோம், நாளை வேலையில் சேர வேண்டியுள்ளது. இந்த நிலையில் தான் இன்று விமானம் ஒரு மணி நேரம் முன்னதாக புறப்பட்டதாக தெரிவித்தார்கள். இனி இதுபோன்று நடக்காதவாறு விமான நிறுவனம் செயல்பட வேண்டும்" என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இது குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த விமானத்தில் பயணம் செய்ய 180 பேர் முன்பதிவு செய்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நேற்றே விமானம் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது குறித்தான தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது. 160 பேர் குறித்த நேரத்தில் வந்துவிட்டனர். ஆனால், இருபது பேர் மட்டும் சரியான நேரத்திற்கு வரவில்லை. அவர்கள் அனைவரும் அவர்களுடைய தொலைபேசி எண்ணோ, மின்னஞ்சல் முகவரியையோ கொடுக்காமல் வேறு ஒருவருடைய மின்னஞ்சல் மூலமாகவோ தொலைபேசி மூலமாகவோ டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.
அந்த மின்னஞ்சலுக்கும், தொலைபேசிக்கும் தான் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 160 பேருக்கு சென்ற தகவல் 20 பேருக்கு மட்டும் எப்படி செல்லாமல் இருக்கும், அவர்கள் யாருடைய எண்ணை கொடுத்து டிக்கெட் முன்பதிவு செய்தார்களோ, அந்த தொலைபேசி எண்ணுக்கு தகவல் அனுப்பப்பட்டது. அவர்கள் தான் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தெரிவித்திருக்க வேண்டும், இந்த விவகாரத்தில் எங்கள் மீது தவறு எதுவும் இல்லை, இருந்தபோதும், விமானத்தை தவறவிட்ட காரணத்தால் அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக, நாளை சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் டிக்கெட் மாற்றி அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல் - திருச்சி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“