திருச்சி மண்டலத்தில் தொழில் முனைவோர் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் ஊக்குவிக்கும் வகையில் வர்த்தக மையம் அமைக்க வேண்டும் என திருச்சி மாவட்டத்தில் உள்ள தொழில்துறையினர் அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
தற்போது திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக அமையுள்ள ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அருகில் ரூ 11 கோடி செலவில் திருச்சி வர்த்தக மையம் தொடங்க உள்ளது. இந்த வர்த்தக மையம் அமைவதற்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. மீதமுள்ள தொகை ரூ.6 கோடி நிதியை தொழில் முனைவோர் மூலம் நிதி திரட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் அரசு வழிகாட்டுதலின்படி திருச்சி டிரேடு சென்டர் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் அரசு சாரா நிறுவனம் ஆரம்பிக்கபட்டு, தமிழ்நாடு நிறுவனங்களின் பதிவாளரின் கீழ் பதிவு செய்யபட்டுள்ளது. இதில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், நாமக்கல் ஆகிய பகுதியிலிருந்து தொழில்துறையினர் 200 பேரை உறுப்பினராக சேர்க்க திட்டமிட்டுள்ளது. தற்போது 44 பேர் உறுப்பினராக சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் திருச்சி வர்த்தக மையத்தின் நிர்வாகிகள் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, திருச்சி வர்த்தக மையத்தின் புதிய தலைவராக எக்ஸெல் குழுமத்தின் தலைவர் எம்.முருகானந்தம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜே.ஆர் அன்பு, திட்ட இயக்குனராக பி. ராஜப்பா, நிதி இயக்குனராக ஆர்.இளங்கோ, சந்தைப்படுத்துதல் இயக்குனராக பி.ரவி, திட்டக்குழு இயக்குனர்களாக கோபாலகிருஷ்ணன், ஜெகதீஸ்வரன், நிதிக் குழு இயக்குனர்களாக செல்வம், புகழேந்தி, சந்தைப்படுத்துதல் குழு இயக்குனர்களாக தேவராஜ், மணிகண்டன் ஆகியோரை தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புதிய நிர்வாகிகள் அறிமுகம் கூட்டத்தில் வர்த்தக மையத்தின் சேர்மன் எம் முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசியதாவது; திருச்சி மண்டலத்தில் வர்த்தக மையம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. இந்த திட்டத்திற்கு 2021 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். திருச்சி-மதுரை, திருச்சி-திண்டுக்கல் சாலையை இணைக்கும் பகுதியில் 9.42 ஏக்கர் இடம் இடம் மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்து சிட்கோ நிறுவனத்தில் ஒப்படைக்கப்பட்டது.
சாலை இணைப்பு தொடர்பாக சில சவால்கள் உள்ளன. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இப்பிரச்னைக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் எம்.பிரதீப்குமார் உறுதியளித்திருந்தார்.
சென்னை, கோவைக்கு அடுத்தப்படியாக திருச்சியில் பிரம்மாண்டமாக இந்த வர்த்தக மையம் இருக்கும். இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும்.
திருச்சி வர்த்தக மையம் 50,000 சதுர அடியில் கட்டப்படும். செலவு அதிகரிப்பு காரணமாக மதிப்பீடு 10% முதல் 15% வரை உயரலாம். இந்த மையம் அதன் சொந்த நிதியில் செலவு அதிகரிப்பு காரணியை நிர்வகிக்கும்.
இந்த வர்த்தக மையத்தில் 2500 பேர் அமரும் வசதியுடன் கருத்தரங்க கூடம், 250 ஸ்டாலுடன் அமைக்கப்பட உள்ளது. அலுவலகம், உணவு கூடம் மற்றும் 500 கார்கள், 1000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியுடன் அமைக்கப்பட உள்ளது.
திருச்சி வர்த்தக மையம் திருச்சியின் அடையாளமாக இருக்கும் வகையில் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். உலகளாவிய தொழில் சார்ந்த மாநாடுகள், கண்காட்சிகள், விற்பனையாளர்கள் கூட்டம், பொருட்காட்சிகள் நடத்தப்படுவதன் மூலம் சிறு, குறு தொழில் மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகளவு பெறுவார்கள் என திருச்சி வர்த்தக மையத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்ற எம்.முருகானந்தம் தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.