இந்தியாவைப் பொறுத்தவரை ரயில் சேவை என்பது இன்றியமையாதது என்றாலும், ஆண்டுதோறும் ஒரு சில இடங்களில் ரயில் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. ரயில் விபத்துக்கள் ஏற்படும்போது மீட்பு பணிகளில் சில சிக்கல்கள் ஏற்படுகிறது. ஆகையால் அவற்றை சரி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
எதிர்பாராத நேரத்தில் ஏற்படும் ரயில் விபத்துக்களால் பல உயிரிழப்பு சம்பவம் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ரயில்களை பராமரிக்கவும், தண்டவாளங்களை சீரமைத்து பாதுகாப்பான முறையில் ரயில் சேவையை வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை எழுந்து வருகிறது.
குறிப்பாக, மத்திய நிதிநிலை அறிக்கையில் ரயில் விபத்துக்கள் ஏற்படாமல் இருப்பதற்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்காகவும், தண்டவாளங்கள் மற்றும் ரயில் சேவையை மேம்படுத்துவதற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், திருச்சி ஜங்ஷன் அருகே குட்செட் ரயில்வே பணிமனையில் தெற்கு ரயில்வே சாா்பில் பேரிடா் கால மீட்பு நடவடிக்கையாக ரயில் பெட்டிகள் தடம் புரள வைத்து விபத்துபோல் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இயற்கை பேரிடா் மற்றும் ரயில் விபத்துகளின்போது பயணிகளை மீட்பது, பாதுகாப்பாக கொண்டு செல்வது, விரைந்து நடவடிக்கை எடுப்பதில் பல்வேறு துறைகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் மீட்பு நடவடிக்கையில் தாமதம் ஏற்படுவதற்கு தீா்வு காணும் வகையில் தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் சாா்பில் பேரிடா் மீட்புப் பயிற்சி இன்று மேற்கொள்ளப்பட்டது.
திருச்சி ஜங்ஷன் அருகே குட்செட் ரயில்வே பணிமனையில் நடைபெற்ற இப்பயிற்சியில் ரயில்வே பாதுகாப்பு பிரிவு, ரயில்வே பாதுகாப்பு படை, தேசிய பேரிடா் மீட்புப் படை, தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படை மற்றும் பெருநகரப் பேரிடா் மீட்புப் படையை சோ்ந்தவர்கள் என 400 போ் கலந்து கொண்டனர். காலை 9 மணியிலிருந்து தொடா்ந்து மதியம் 12 மணி வரை சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த பயிற்சிக்காக ரயில் விபத்து போல் ஒரு சம்பவத்தை ரயில்வே துறையினர் உருவாக்கினர்.
விபத்து ஏற்பட்டது போன்று பெட்டிகள் ஒன்றன் மேல் ஒன்றாக கிரேன் மூலம் அமைக்கப்பட்டன. பின்னா் மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள், மீட்பு பணியாளா்கள், பொறியாளா்கள், பாதுகாப்பு படை வீரர்கள், மீடியாக்கள் வாகனம் என ஒரே இடத்தில் ஒரு சேர வரவழைக்கப்பட்டு விபத்து நடந்த ரயிலில் இருந்து பயணிகளை மீட்கும் அவசர கருவிகளுடன் நிவாரண பணியில் ஈடுபடுவது போன்ற ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
தொடா்ந்து விபத்தின்போது பணியாளா்கள் மற்றும் அவசர கால பொருள்களை திரட்டுதல், விளக்குகள் அமைத்தல், தடம் புரண்ட பெட்டியில் இருந்து பயணிகளை மீட்டல், அவசர கட்டுப்பாட்டு மையம் அமைத்தல், காயமடைந்தவா்களுக்கு முதலுதவி வழங்குதல், போக்குவரத்தை சீரமைத்தல் உள்ளிட்டவை குறித்து அனைத்து துறை பணியாளா்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்தப் பயிற்சியில், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் எம் எஸ் அன்பழகன், முதன்மை தலைமை பாதுகாப்பு அதிகாரி, தேசிய பேரிடா் மேலாண்மை மூத்த அதிகாரிகள், மருத்துவர்கள், தீயணைப்பு அலுவலர்கள், ஆம்புலன்ஸ் ஊர்தி ஓட்டுநர்கள், ரயில்வே பணியாளர்கள் கலந்து கொண்டு மீட்பு பணியில் ஈடுபட்டு பயிற்சி பெற்றனர். இந்த ரயில் விபத்து ஒத்திகை பயிற்சியை தத்ரூபமாக செய்து காட்டப்பட்டது.
செய்தி: க.சண்முகவடிவேல் திருச்சி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.