Advertisment

ஆன்லைன் மோசடியில் தமிழக இளைஞரை பயன்படுத்திய விவகாரம்; திருச்சி தனியார் டிராவல்ஸ் உரிமையாளர் கைது

ஆன்லைன் மோசடியில் தமிழக இளைஞரை பயன்படுத்தியதாக திருச்சி தனியார் டிராவல்ஸ் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

author-image
WebDesk
New Update
கைது

டிராவல்ஸ் உரிமையாளர் கைது

வெளிநாடுகளில் இயங்கி வரும் ஆன்லைன் மோசடி நிறுவனங்களில் பணிபுரிய சட்டவிரோதமாக வேலைக்கு ஆள் அனுப்பி வந்த திருச்சி டிராவல்ஸ் நிறுவனத்தில் தமிழ்நாடு குடிபெயர்வு பாதுகாவலர், சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தி, அந்த நிறுவனத்தின் பெண் உரிமையாளரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தைச் சேர்ந்தவர் ஆர்.முத்து. பிஎஸ்சி பட்டதாரியான இவர், வெளிநாடு மென்பொருள் நிறுவனங்களில் வேலை தேடி வந்தார். இந்நிலையில், முத்துவுக்கு ஒரு முகவர் மூலம் திருச்சி, டிவிஎஸ் டோல்கேட்டில் உள்ள ரோஷன் டூர்ஸ் அண்டு டிராவல்ஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த பாத்திமா (37) என்பவர் அறிமுகமாகி உள்ளார்.

பாத்திமா அவருக்கு கம்போடியா நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் வேலை வாங்கித் தருவதாக கூறி, அவரிடமிருந்து பாஸ்போர்ட், ரூ.30 ஆயிரம் பணம் வாங்கினார். சில நாட்கள் கழித்து முத்துவை தொடர்பு கொண்ட இமானுவேல் என்பவர், ‘உங்களுக்கு வேலை கிடைத்துவிட்டது. உடனடியாக ரூ.2.70 லட்சம் பணம் அனுப்பி வைக்கும்படி’ கூறி உள்ளார்.

மேற்கொண்டு சில தகவல்களை முத்து கேட்டபோது அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை. இதையடுத்து, உஷாரான முத்து, இந்திய குடிபெயர்வு பாதுகாப்பு அலுவலக உதவி எண்ணுக்கு (9042149222) புகார் தெரிவித்தார்.

Advertisment
Advertisement

இதையடுத்து, தமிழ்நாடு குடிபெயர்வோர் பாதுகாவலர் ராஜ்குமார் மற்றும் திருச்சி சிபிசிஐடி டிஎஸ்பி மதன், ஆய்வாளர் மோகன் மற்றும் போலீஸார், டிவிஎஸ் டோல்கேட்டில் உள்ள ரோஷன் டூர்ஸ் அண்டு டிராவல்ஸ் நிறுவனத்தில் நேற்று பிற்பகல் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த நிறுவனத்துக்கு வெளிநாடுகளுக்கு டிக்கெட் மட்டுமே முன்பதிவு செய்து தருவதற்கான உரிமை உள்ளது. ஆனால் வேலைக்கு ஆள் அனுப்புவதற்காக எந்த லைசன்சும் இல்லை. தொடர்ந்து ஆவணங்களை ஆய்வு செய்தபோது சட்டவிரோதமாக பலரை வெளிநாடுகளுக்கு அனுப்பியது தெரியவந்தது.

மேலும் பலரிடம் பாஸ்போர்ட், பணம் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து பாத்திமாவை கைது செய்த சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதுகுறித்து தமிழ்நாடு குடிபெயர்வோர் பாதுகாவலர் ராஜ்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: ”கம்போடியா, லாவோஸ், மியான்மர் போன்ற நாடுகளில், ஆன்லைன் மூலம் மோசடி செய்யும் (ஸ்கேமிங் கம்பெனி) நிறுவனங்கள் அதிகளவு உள்ளன. இந்த நிறுவனங்களில் சிஸ்டம்ஸ் ஒர்க், கஸ்டமர்கேர், எக்சிக்யூட்டிவ், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் போன்ற வேலைகளுக்கு பணிபுரிய தமிழக இளைஞர்கள் அனுப்பப்படுகின்றனர்.

சட்டவிரோதமாக வேலைக்கு ஆள் அனுப்பும் நிறுவனங்கள் இதுபோன்ற நாடுகளுக்கு தமிழக இளைஞர்களை அனுப்பி வைக்கின்றன. அவர்கள் அங்கு ‘சைபர் குற்ற அடிமைகளாக’ மாற்றப்படுகின்றனர்.
ரூ.50 முதல் ரூ.70 ஆயிரம் சம்பளம், தங்கும் இடம், உணவு இலவசம் என ஆசை வார்த்தைக்கூறி ஏமாற்றி வேலைக்கு அழைத்துச் செல்கின்றனர்.

முதலில் டூரிஸ்ட் விசாவில் பாங்காக் அழைத்துச் சென்று அங்கிருந்து இதுபோன்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். அங்கு வேலைக்கு சென்றபிறகு சைபர் குற்றங்களை செய்யத் தூண்டுகின்றனர். செய்ய மறுப்பவர்களுக்கு எல்க்ட்ரிக் ஷாக் கொடுப்பது, மனரீதியான தொந்தரவுகள் அளிப்பது என பல்வேறு வகையில் டார்ச்சர் கொடுக்கின்றனர்.

இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைப்பதாக இருந்தால், இன்னொருவரை அழைத்து வா அப்போது தான் அனுப்புவோம்; இல்லையென்றால் பணம் கொடு என்று மிரட்டுகின்றனர். இந்திய தூதரகம் மூலம் கடந்த 2 மாதத்தில் மட்டும் 31 தமிழர்கள் மீட்கப்பட்டு வந்துள்ளனர்.

இந்திய குடிபெயர்வோர் பாதுகாப்பு அலுவலக விழிப்புணர்வால், விமான நிலையம் வரை சென்று விட்டு 12 பேர் அந்த மோசடியிலிருந்து தப்பி உள்ளனர். இந்நிலையில் திருச்சியை சேர்ந்த சட்டவிரோத நிறுவனம் ஒன்று 3 இளைஞர்களை விசா இல்லாமல் தாய்லாந்து வழியாக கம்போடியாவில் உள்ள சைபர் மோசடி நிறுவனத்துக்கு வேலைக்கு அனுப்பி வைக்க உள்ளதாக எங்கள் அலுவகத்தின் உதவி எண்ணுக்கு (9042149222) ஒரு தகவல் வந்தது.

இதில் ஒருவர் தனது பயணத்தை ரத்து செய்திருந்தார். மற்ற இருவர் வேறு மாநிலம் வழியாக செல்ல முயற்சித்தனர். அதை நாங்கள் முன்கூட்டியே தெரிந்து கொண்டு அவர்களை தடுத்து நிறுத்திவிட்டோம்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நடைபெறும் ‘சைபர் அடிமைத்தன’ வழக்குகளை தமிழகத்தில் சிபிசிஐடி போலீஸார் விசாரிக்கின்றனர்.

அவர்களிடம் நாங்கள் அளித்த தகவல் அடிப்படையில் திருச்சியில் சோதனை நடத்தி ஒருவரை கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.  மேலும் அவர் ‘வெளிநாட்டுகளுக்கு வேலைக்கு செல்ல விரும்பும் இளைஞர்கள், இந்திய வெளி விவகாரத்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டு உரிமம் (லைசன்ஸ்) வழங்கப்பட்ட முகவர்கள் மூலமாகத் தான் வெளிநாடுக்கு செல்ல வேண்டும்.

emigrate.gov.in என்ற வெப்சைட் மூலம் இதை அறியலாம். வெளிநாடு செல்ல விரும்புபவர்கள் சரியான முகவர்கள் மூலம், சரியான வேலைக்கு செல்ல வேண்டும்’ என்றார்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Arrest Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment