/indian-express-tamil/media/media_files/2025/07/20/trichy-bus-fare-2025-07-20-13-09-35.jpg)
பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் கட்டணக் கொள்ளை: அறிவிக்கப்படாத கட்டண உயர்வால் பயணிகள் அவதி
திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் புதிதாகத் திறக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், அங்கு அறிவிக்கப்படாத பேருந்துக் கட்டண உயர்வு பயணிகளை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது.
பஞ்சப்பூரில் ரூ.408.36 கோடியில் பிரமாண்டமாக கட்டப்பட்ட இந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கடந்த 16-ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வந்தது. பேருந்து நிலையத்தை திறந்துவைத்த அமைச்சர் கே.என். நேருவும, வழித்தடங்களை அறிவித்த மாவட்ட ஆட்சியர் சரவணனும், பழைய பேருந்துக் கட்டணமே வசூலிக்கப்படும், கட்டணம் உயர்த்தப்படாது என்று உறுதியளித்திருந்தனர். ஆனால், 4 நாட்களாக அரசு பேருந்துகளிலும், தனியார் பேருந்துகளிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் அவதிப்படுகின்றனர். நடத்துநர்களுக்கும், பயணிகளுக்கும் இடையே இதுதொடர்பாக தொடர்ந்து வாக்குவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
கட்டண உயர்வு எங்கே?
சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் புறநகர் பேருந்துகளிலோ, மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து கரூருக்குச் செல்லும் புறநகர் பேருந்துகளிலோ கட்டண உயர்வு இல்லை. ஆனால், பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து இதர ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளிலும், புறநகர் பேருந்துகளிலும் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். 1 முதல் 5 பேருந்து நிறுத்தங்களில் நின்று செல்லும் பேருந்துகளில் ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக ரூ.5 வசூலிக்கப்படுகிறது. இடைநில்லாப் பேருந்துகளிலும் (1-1) கூடுதலாக ரூ.5 வசூலிக்கப்படுகிறது. அதே வழித்தடத்தில் செல்லும் குளிர்சாதன வசதி பேருந்துகளில் கூடுதலாக ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நேற்று சனிக்கிழமை, திருச்சியிலிருந்து புதுக்கோட்டை சென்ற குளிர்சாதனப் பேருந்துகளில் பழைய கட்டணம் ரூ.60-க்கு பதிலாக ரூ.70 வசூலிக்கப்பட்டது. சாதாரணப் பேருந்துகளில் ரூ.47-க்கு பதிலாக ரூ.52, இடைநில்லாப் புறநகர்ப் பேருந்துகளில் ரூ.50-க்கு பதிலாக ரூ.55 வசூலிக்கப்பட்டது. இதேபோல், அனைத்து வழித்தடங்களிலும் ரூ.5 முதல் ரூ.10 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாகப் பயணிகள் தெரிவிக்கின்றனர். நகரப் பேருந்துகளிலும், சத்திரம் முதல் ஜங்ஷன் வரை முன்பு ரூ.10 கட்டணம் இருந்த நிலையில், இப்போது பஞ்சப்பூருக்குக் கூடுதலாக ரூ.5 உயர்த்தி ரூ.15 வசூலிக்கப்படுகிறது.
குறிப்பாக, தினக்கூலித் தொழிலாளர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் என, அருகிலுள்ள ஊர்களில் இருந்து திருச்சி (பஞ்சப்பூர்) வந்து செல்வோருக்கு இந்த கட்டண உயர்வு பெரும் சுமையாக உள்ளது. ஒவ்வொரு நாளும் பேருந்துச் செலவு முன்பை விட கூடுதலாக ரூ.30 வரை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகள் விளக்கம்:
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சரவணன் கூறுகையில், "தஞ்சாவூர் வழித்தடத்தில் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் புகார் வந்தது. உடனடியாக எச்சரித்து பழைய கட்டணத்தை வசூலிக்க உத்தரவிடப்பட்டது. அரசுப் பேருந்துகளிலும் பழைய கட்டணத்தையே வசூலிக்க உத்தரவிட்டுள்ளோம். இதுதொடர்பாகப் புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
திருச்சி மண்டல வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தினர் கூறுகையில், "மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து பஞ்சப்பூர் வரையிலான 9 கி.மீ. தொலைவுக்கான டீசல் செலவை ஈடுசெய்ய வேண்டியுள்ளது. எனவே அதற்கேற்ப கட்டணம் மாற்றப்படும். இதுதொடர்பாக அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தனியார் பேருந்து நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இரண்டு அல்லது மூன்று நாட்களில் மாற்றப்பட்ட கட்டணம் அறிவிக்கப்படும். இதன்படி சாதாரணப் பேருந்துகளில் ரூ.3 முதல் ரூ.5 வரையும், குளிர்சாதனப் பேருந்துகளில் சற்று கூடுதல் கட்டணமும் இருக்கும். அதுவரை பழைய கட்டணத்தை மட்டுமே வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.