/indian-express-tamil/media/media_files/2025/09/09/trichy-tvk-chief-vijay-to-begin-state-wide-election-campaign-september-13-tamil-news-2025-09-09-16-41-12.jpg)
வருகிற 13 ஆம் தேதி திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு மனு அளித்துள்ளார் த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்லி என். ஆனந்த்.
தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், செப்டம்பர் 13 அன்று திருச்சியில் இருந்து தமிழ்நாடு முழுவதும் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தைத் தொடங்க திட்டமிட்டிருந்தார். இந்த சுற்றுப்பயணம் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்படுகிறது.
இந்த பயணத்தில் விஜய் ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு 10 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் பிரசாரம் செய்யவுள்ளார்.
முக்கிய நகரங்களில் ரோடு ஷோ மற்றும் திறந்த வேனில் பேசுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு வாகனம் ஒன்றும் இதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்காக திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரியிருந்தனர். ஆனால், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் ஸ்ரீரங்கம் பகுதியில் சுற்றுப்பயணத்தைத் தொடங்குவதற்கு திருச்சி மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதன் பின்னர், இரண்டாவது முறையாக டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் அனுமதி கோரியபோதும், அதுவும் மறுக்கப்பட்டது. இதனால், திருச்சி காந்தி மார்கெட் அருகே உள்ள மரக்கடை பகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டு த.வெ.க திருச்சி மாவட்ட நிர்வாகிகள் திருச்சி காவல் துறை துணை ஆணையர் சிபினிடம் இன்று மனு அளித்துள்ளனர்.
இதற்கும் அனுமதி மறுக்கப்படலாம் என்ற அச்சத்தில் த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் நிர்வாகிகளுடன் டிஜிபியை இன்று நண்பகல் சந்தித்து விஜய் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வது தொடர்பாக பாதுகாப்பு மற்றும் அனுமதி கடிதத்தை வழங்கியுள்ளார். அதில் 13 ஆம் தேதி திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு மனு அளித்துள்ளார். இந்நிலையில், தமிழகத்தில் விஜய்யின் பிரசார பயணத்தின் முழு விபரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமைகளில் மக்களை சந்திக்கும் விஜய்
வாரம் ஒரு நாள் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்கிறார் த.வெ.க. தலைவர் விஜய். வரும் 13ம் தேதி திருச்சியில் தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை வாரம் ஒரு முறை சனிக்கிழமை மக்களை சந்திக்கிறார். அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் மட்டும் சனி, ஞாயிற்றுக்கிழமை மக்களை சந்திக்கிறார். ஒவ்வொரு சனிக்கிழமையும் குறைந்த பட்சமாக ஒரு மாவட்டம், அதிகபட்சமாக 3 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.