/indian-express-tamil/media/media_files/2025/09/03/trichy-vaiko-condemn-amit-shah-dmk-bjp-tamil-news-2025-09-03-12-37-58.jpg)
"வரி உயர்த்தி இருப்பதை எதிர்த்து தடுத்து நிறுத்தி அதற்கு தேவையான மாற்று வழிகளை உருவாக்கி கொடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்." என்று வைகோ தெரிவித்தார்.
திருச்சியில் அண்ணா பிறந்த நாளையொட்டி சிறுகானுரில் நடைபெற உள்ள மாநாட்டு பணிகளை பார்வையிட்ட ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:-
தமிழ்நாட்டு பொருளாதாரத்தில் மிகப்பெரிய நெருக்கடியை அமெரிக்க ஏகாதிபத்திய டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ளார். இந்தியாவில் ஆடைகள் உற்பத்தியின் தலைநகரமாக இருக்கும் திருப்பூரில் தயாராகும் பின்னல் ஆடை தொழிலுக்கும், வேளாண், பால் உற்பத்தி தொழிலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகின்ற விதத்தில் 25 விழுக்காடு வரி விதிப்பை 50% உயர்த்தி இருக்கிறது. வரி உயர்த்தி இருப்பதை எதிர்த்து தடுத்து நிறுத்தி அதற்கு தேவையான மாற்று வழிகளை உருவாக்கி கொடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனால், எந்த கோரிக்கையும் இதுவரை நிறைவேற்றாமல் மத்திய அரசு தமிழகம் பொருளாதார முதுகெலும்பு நொறுக்கப்பட்டால் என்ன என்று செயல்படுவதை கண்டித்து திருப்பூரில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய நாட்டினுடைய ஜனநாயகத்தின் அரசியல் சட்டத்தில் 130-வது சட்ட திருத்தத்தை ஒரு துறை அமைச்சர் அமித்ஷா முன் வைத்திருக்கிறார், வாதம் ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் அதை நிறைவேற்றி விடுவார்கள் என்றால் அதன்படி முப்பது நாட்கள் எந்த மாநில முதலமைச்சர் இருந்தாலும், அமைச்சர்களாக இருந்தாலும், விசாரணை நடைபெறாமல் நீதிமன்றம் தீர்ப்பளிக்காமலேயே அவர்களின் பதவியை பறிக்கலாம் என்று இந்த மசோதாவை முன் வைத்திருக்கிறார்.
உலகத்தில் எந்த ஜனநாயக நாட்டிலும் இப்படிப்பட்ட மிகவும் மோசமான ஒரு சட்டத்தை எவரும் முன்வைக்க துணிவதில்லை, இது எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்காகவும், தங்களுக்கு எதிராக செயல்படுகிற முதல்வர்களையும் அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்வதற்காக மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற வரலாறு காணாத மோசடியானதாகும், அதேபோல், பீகார் மாநிலத்தில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியிருக்கிறார்கள். இது படுமோசமான செயலாகும். நீக்கப்பட்டவர்கள் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் நல்லாட்சி ஆட்சி நடத்தி வருகிற திராவிட முன்னேற்ற கழகத்தை அண்மையிலே இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா குறிப்பிடும்போது தி.மு.க-வை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என கூறி இருக்கிறார். ஒரு உள்துறை அமைச்சர் அரசியல் ரீதியாக பேசும்போது ஒரு கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்று பேசலாம் அது ஜனநாயகத்தில் நடக்கக்கூடியது. எண்ணற்ற பேர் தன் உயிர்களையும், ரத்தக்களும் சிந்தி உள்ள தி.மு.கவை வேரோடு சாய்க்க வேண்டும் என கூறியிருப்பது கண்டனத்திற்குரியதாகும்.
தமிழக முதல்வர் ஜெர்மனியில் ஈர்த்து இருக்க கூடிய முதலீடு, வேலைவாய்ப்பு குறித்து விரிவாக சொல்லியிருக்கிறார். வெள்ளை அறிக்கை தர வேண்டும் என்று சொல்வது ஏற்கக் கூடியது அல்ல. அவர் திரும்பி வந்தவுடன் முழுமையாக செய்தியாளருக்கு விவரங்களை தரப் போகிறார்.
ஜி.எஸ்.டி கூட்டத்திற்கு தமிழக அரசு 18 கோரிக்கைகளை அமைச்சர் முன் வைத்திருக்கிறார். அதனை செய்வார்களா என்பது ஐயத்துக்குரியது
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் ம.தி.மு.க நிர்வாகிகள் மருத்துவர் ரொஹையா மற்றும் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.