க.சண்முகவடிவேல்
பா.ஜ.க. மாநில மகளிர் அணி செயற்குழுக்கூட்டம் இன்று திருச்சியில் நடந்தது. இதில், பா.ஜ.க. மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியது பின்வருமாறு:-
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து பா.ஜ.க-வின் மகளிர் அணி சார்பில் பல்வேறு பிரசாரங்களை மேற்கொள்ள இருக்கிறோம். இதில், மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு செல்ல ஒரு குழு அமைக்கப்பட்டு அந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் மத்திய அரசின் திட்டங்களை எடுத்து கூறி வருகின்றனர்.
இதேபோன்று மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளை சந்தித்து இந்த திட்டத்தின் பயன்களை அவர்கள் மூலம் பொதுமக்களுக்கு எடுத்து கூற இருக்கிறோம். மேலும், பயனடைந்த பயனாளிகளுடன் செல்பி எடுத்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்த இருக்கிறோம்.
இதன் வாயிலாக ஒவ்வொரு திட்டத்திற்கும் யார் அதிகாரி, அவரிடம் எந்த ஆவணங்களை சமர்ப்பிப்பது, எம்மாதிரியான ஆவணங்களை தயார் செய்ய வேண்டும், அந்த அதிகாரியிடம் சென்று பேசுவது என்று களத்திலே தங்களை சுற்றி இருக்கக்கூடிய பெண்களுக்கு இந்த திட்டத்தின் வாயிலாக தெரிந்து கொள்வதன் வாயிலாக உதவி செய்து கொண்டிருக்கிறார்கள்.
இவை இல்லாமல் ஒரு மாதத்திற்கு இரண்டு நாள் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த இரண்டு நாளும் ஒவ்வொரு பூத்-களிலேயும் குறைந்தது 100 இல் இருந்து 150 வீடுகளுக்கு நேரடியாக மகளிரணியினர் சென்று மத்திய அரசினுடைய திட்டங்களை பற்றியும், தமிழகத்திற்கு ஏன் பாரதிய ஜனதா கட்சி தேவை என்பது பற்றியும் விளக்கி கூற இருக்கிறார்கள்.
செப்டம்பர் மாதம் முதல் மாதத்தில் இரண்டு நாள் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று பிரச்சாரம் மேற்கொள்வது என்ற முடிவையும் மகளிர் அணி எடுத்திருக்கிறது. இவையில்லாமல் தமிழகம் சார்ந்த இருக்கக்கூடிய பிரச்சனைகள் தமிழகத்திலேயே பெண்களுக்கு இருக்கக்கூடிய பாலியல் சம்பந்தமான பிரச்சனைகள், வேறு விதமான சமூகப் பிரச்சனைகள் போன்றவற்றை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்களுக்கும் உதவி கரம் ஏற்றுவதில் பா.ஜ.க மகளிரணி முன்னணியில் இருக்கிறது.
பல்வேறு போராட்டங்களை மகளிரணியினுடைய தலைவர் முன்னெடுத்து இருக்கிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் மதுவுக்கு எதிராக மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்கிறது. இன்னும் வரும் காலங்களில் மகளிர் அணியின் செயல்பாடு ஒவ்வொரு மண்டலங்களையும் நோக்கியும், இன்னும் வேகமாக செயல்படும்.
வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு கடுமையாக வேலை பார்ப்பதற்கு 66 மாவட்டங்களிலும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு, சுயநல குழுக்களை சந்திப்பது, அவர்களுக்கு உதவி செய்வது, மகளிர் தங்கும் இடங்களில் உள்ள மகளிர்க்கு தேவையான உதவிகளை செய்ய ஒரு குழு என பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தங்களுடைய பணியை விரிவுபடுத்தி இருக்கின்றனர். அதைப் பற்றிய முழுமையான திட்டமிடல், இதற்கென்று தனி நிர்வாகிகளை பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் அதனுடைய துவக்கமாகவும் இந்த மகளிரணி செயற்குழுவை எடுத்துக் கொள்ளலாம்.
பிரதமர் மோடி ஆட்சிக் காலத்தில் வருடம் தோறும் ஒரு கோடி ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பை வழங்கி உள்ளார். தேர்தல் வாக்குறுதியில் கூறியதை பிரதமர் மோடி ஏழை மக்களுக்காக செய்துள்ளார். 200 ரூபாய் கேஸ் விலையை குறைத்து இருப்பது அரசியலுக்காக அல்ல. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கியாஸ் சிலிண்டர் விலை ரூபாய் 100 குறைப்பேன் என்று கூறிவிட்டு இதுவரை குறைக்கவில்லை.அவர்கள் மத்திய அரசு கேஸ் விலையை குறைக்க வேண்டும் என்று கூறுவதற்கு தகுதி கிடையாது.
தயவுசெய்து பா.ஜ.க.-வுடன் காங்கிரசை ஒப்பிடாதீர்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடி பெண்கள் புதிதாக கேஸ் இணைப்பை பெற்றுள்ளார்கள். பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம் அதற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்தால் கணிசமாக விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். எத்தனை ஆண்டுகளுக்கு நாம் வெளிநாட்டில் இருக்கக்கூடிய எரிபொருளை நம்பிக் கொண்டிருக்க முடியும் அதற்கு மாற்று வழியை நாம் உருவாக்க வேண்டும். எத்தனால், சோலார் போன்ற மாற்று எரிபொருளை நோக்கி நாம் செல்ல வேண்டும்.
குடும்ப ஆட்சி நடத்துகின்ற, ஊழல் கறை படிந்த அத்தனை பேரும் ஒரே மேடையில் அமர்ந்து, நேர்மையாக திறமையாக ஆட்சி நடத்தக்கூடிய மோடி அவர்களுக்கு எதிராக கூட்டணி அமைத்து இருக்கிறார்கள். இந்த கூட்டணியை ஒருபோதும் மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை அவர்களுக்கு வெற்றியும் கிடைக்கப் போவதில்லை.
'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பது ஒரு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கருத்தை மக்கள் முன்பாக வைக்கிறோம். இது குறித்து குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு கருத்துகளைக் கொண்டு விவாதிக்கப்படும். இதனால் நன்மை என்ன, தீமை என்ன, சாத்திய கூறுகள் உள்ளதா? என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும்.
தேர்தல் சீர்திருத்தம் என்பது இந்நாட்டிற்கு மிக அவசியம். தமிழகத்தில் யார் எந்த தொகுதியில் போட்டியிட உள்ளார்கள் மற்றும் வேட்பாளர்கள் பெயர்களை மத்தியில் இருக்கக்கூடிய பாஜக தேர்தல் குழு அறிவிக்கும். தமிழ்நாட்டில் மோடி அவர்கள் போட்டியிட வேண்டும் என்று நாங்களும் விரும்புகிறோம், மக்களும் விரும்புகிறார்கள் ஆனால் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ காத்திருந்து பார்ப்போம்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஊர் ஊராக சென்று காய்ச்சல் வந்தது போல் பிதற்றிக் கொண்டிருக்கிறார். இந்தியா (I. N. D. I. A - ஐ.என்.டி.ஏ.) கூட்டணியை ஒருபோதும் மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அவர்கள் வெற்றி பெறவும் முடியாது. எத்தனை பேர் சேர்ந்தாலும் ஒன்றும் சாதிக்கவும் முடியாது.
'ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அனைவரிடமும் கருத்து கேட்டு மத்திய அரசு முடிவு செய்யும். வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம். பா.ஜ.க. கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது என்றார். இந்த சந்திப்பின்போது திருச்சி மாவட்ட பா.ஜ.க தலைவர் ராஜசேகரன் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.