திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் மாராடி கிராமத்தைச் சேர்ந்தவர் அஸ்வின். இவரது மனைவி சத்யா என்பவருக்கு மாராடி கிராமத்தில் அரசால் வழங்கும் இலவச வீட்டு மனை பட்டா ஒதுக்கீடு செய்யப்பட்டு கிடைக்கப்பட்டுள்ளது.
இலவச வீட்டு மனை பட்டா கடந்த 22.08.2023 அன்று திருச்சி மாவட்ட ஆட்சியரால் 138 பேருக்கு வழங்கப்பட்டது. அன்றைய தினம் மாவட்ட ஆட்சியரிடம் இலவச வீட்டு மனை பட்டா பெற முடியாத காரணத்தால் சத்தியா மறுநாள் 23.08.23 அன்று கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் சென்று அங்கிருந்த வி.ஏ.ஓ சுமதி என்பவரிடம் தனது வீட்டு மனை பட்டா கொடுக்க வேண்டுமாறு கேட்டுள்ளார். அதற்கு வி.ஏ.ஓ சுமதி லஞ்சமாக பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே உங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க முடியும் என்று கறாராக கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: களத்தில் இறங்கிய கமிஷனர்: திருச்சியில் ரூ.1.72 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்; 37 பேர் கைது
இந்த தகவலை சத்யா தனது கணவர் அஸ்வினிடம் தெரியப்படுத்தியபோது, அவர் பணமில்லாமல் பட்டா பெற போலீசார் இடம் போகலாம் என தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சத்தியா மீண்டும் 29.08.23 அன்று மாராடி வி.ஏ.ஓ அலுவலகம் சென்று வி.ஏ.ஓ சுமதியை சந்தித்து தனது வீட்டுமனை பட்டாவை கொடுக்குமாறு கெஞ்சியுள்ளார். அதற்கு வி.ஏ.ஓ சுமதி 3000 ரூபாய் குறைத்துக் கொண்டு ரூ.7000 கொடுத்தால் மட்டுமே வீட்டுமனை பட்டாவை வழங்க முடியும் என்று கூறியுள்ளார்.
இதனை அடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத சத்தியா திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின் பேரில், சத்தியா இன்று 30.08.2023 மதியம் மாராடி வி.ஏ.ஓ அலுவலகத்தில் வி.ஏ.ஓ சுமதியிடம் 7000 ரூபாய் லஞ்சம் கொடுக்கும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக வி.ஏ.ஓ சுமதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு இலவசமாக கொடுத்த வீட்டுமனை பட்டாவுக்கு லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ லஞ்ச ஒழிப்பு துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டது திருச்சி வருவாய்த்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“