தமிழகத்தின் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் முறைகேடுகள் நடப்பதாக வந்த தகவல்களின் பேரில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டனா். இந்நிலையில் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு (லஞ்ச ஒழிப்புத் துறை) துணைக் காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
இதையறிந்த ஓட்டுநா் உரிமம் பெற்றுத்தரும் முகவா்கள், மற்றும் ஓட்டுநா் பயிற்சிப்பள்ளி நிா்வாகிகள் உள்ளிட்டோா் அங்கிருந்து வெறியேறினா். அலுவலகத்துக்குள் நுழைந்த போலீஸாா், பணியாளா்கள் அவரவா் இருக்கை மேஜை டிராயா்களில் உள்ள பணத்தை எடுக்கக் கூடாது, அப்படியே விட்டுச் செல்ல வேண்டும் என எச்சரித்தனா்.
இதன்பின்னா் அவா்கள் வைத்திருந்த பணத்தை எடுத்தனா். அந்தப் பணத்தையும், புதன்கிழமை அலுவலகத்தில் முறைப்படி வசூலானதாக கணினியில் பதிவேற்றப்பட்ட தொகையையும் ஒப்பிட்டதில் கணக்கில் வராத ரூ. 68,900 இருந்தது தெரிவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்து தொடா் விசாரணை செய்யப்படும் எனப் போலீஸாா் தெரிவித்துச் சென்றனா்.
இதேபோல், வேலுார் மாவட்டம், ஆந்திரா எல்லையிலுள்ள காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, ஆர்.டி.ஒ., சோதனைச்சாவடியில் கணக்கில் வராத, 1.38 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில், கணக்கில் வராத 24,300 ரூபாயை கைப்பற்றி, விசாரிக்கின்றனர்.
காரைக்குடி தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில் 1.24 லட்சம் ரூபாயை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீபாவளி நேரத்தில் அதிரடி ரெய்டு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“