தமிழக காவல்துறை இயக்குநர்/காவல் படை தலைவர், தமிழகம் முழுவதும் ஏப்ரல் 12,13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் வார இறுதிநாள் சிறப்பு ஆபரேஷன் (Week end SPL Operation) செய்து குற்றச் செயல்களை தடுக்க அறிவுறுத்தி இருந்தார்.
இந்த 3 நாட்களில் 2 ஷிப்டுகளில் இருசக்கரவாகன தணிக்கைகள் செய்யவும், தங்கும் விடுதிகளை தணிக்கை செய்யவும், ரோந்து பணி மேற்க்கொள்ளவும் போலி வாகன எண்கள் பொருத்தி குற்றசம்பவங்களில் ஈடுபடும் வாகனங்களை கண்டறியவும், இருசக்கர வாகனங்களில் Dummy runs (காவலர்களை சாதாரண உடையில் ஆயுதங்களுடன் அனுப்புதல்) மூலம் திருச்சிமாநகரத்தில் வாகன தணிக்கை மற்றும் தங்கும் விடுதிகள் தணிக்கை ஆகியவை முறையாக நடக்கிறதா என கண்காணித்திடவும், மேலும் மாநகர காவல் ஆணையர்கள்/ மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் இரவு ரோந்தை மேற்பார்வையிடவும் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மேற்கண்டவாறு Week end Special Operation மற்றும் இருசக்கர வாகனங்களில் Dummy runs மூலம் வாகன தணிக்கை மற்றும் தங்கும் விடுதிகள் தணிக்கைகள், நேற்று 12-ந் தேதி மாலை திருச்சி மாநகரில் 9 சோதனை சாவடிகள் (Check Post), சிறப்பு உதவி ஆய்வாளர் தலைமையில் 14 நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் (Patrols), 10 புதிய இரண்டு சக்கர ரோந்து வாகனங்கள், 3 நெடுஞ்சாலை நான்கு ரோந்து வாகனங்கள் (Highway Patrol) மற்றும் மாநகரின் 38 முக்கிய சந்திப்புகளில் 6 ஆய்வாளர்கள் 14 உதவி ஆய்வாளர்கள் 50 காவல் ஆளிநர்கள் மற்றும் வழக்கமான 50 இரவு ரோந்து ஆளிநர்கள் என காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுடன் தீவிர வாகன தணிக்கை மற்றும் தீவிர ரோந்து மேற்கொள்ளப்பட்டது. மேலும் 10 Dummy runs (காவலர்களை சாதாரண உடையில் ஆயுதங்களுடன் அனுப்புதல்) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வாகன தணிக்கையின்போது இருசக்கர வாகனங்கள் போலி எண்கள் கொண்டு வலம் வருகின்றனவா? எனவும், Dummy runs இருசக்கர வாகனங்களை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் சரியாக கண்டுபிடித்து. விசாரணை செய்கிறார்களா எனவும், மேலும் வாகனங்களின் ஆவணங்களை சரிபார்த்தும், FRS செயலி மூலமாக குற்றவாளிகளின் முக அடையாளங்களை சரிபார்த்தும் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்க அறிவுரை வழங்கப்பட்டது.
திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, இரவு திருச்சி மாநகரில் நடைபெற்ற சிறப்பு வாகன தணிக்கைகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்கள். வாகன தணிக்கையில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பேட்டன்லைட் (Baton Light) மற்றும் ரிப்லைட்டிங் ஜாக்கெட் (Reflecting jacket) அணிந்து தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு வாகன தணிக்கை செய்யவும், அனைத்து இருசக்கரம், மூன்று சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் தீவிரமாக தணிக்கை செய்ய வேண்டும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேற்கண்ட சிறப்பு வாகன தணிக்கைகளின் மூலம் திருச்சி மாநகரில் 16 DD(மது அருந்தி வாகனம் ஒட்டுதல்) வழக்குகள் மற்றும் இதர 300 வழக்குகள் என மொத்தம் 316 மோட்டர் வாகன சட்டத்தின்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், திருச்சி மாநகரில் தொடர்ந்து தீவிர வாகன தணிக்கை செய்து மற்றும் தீவிர இரவு ரோந்துகள் மேற்கொள்ளப்படும். குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செய்தி: க.சண்முகவடிவேல்