திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு சென்னை, மதுரை, கோவை, ஈரோடு, புதுச்சேரி உள்ளிட்ட 8 இடங்களில் ப்ரணவ் ஜுவல்லரி கடை செயல்பட்டு வந்தது.
இதன் விளம்பர தூதுவர்களாக நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகைகள் ராதிகா, சைத்ரா ரெட்டி ஆகியோர் இருந்தனர். இந்த நகைக் கடைகளின் உரிமையாளர்களான மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா ஆகியோர் மாதாந்திர நகைச் சீட்டு நடத்தியும், கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டும் வாடிக்கையாளர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் வசூலித்தனர்.
மாதாந்திர சீட்டு முதிர்வு காலம் முடிந்த பிறகு நகை கேட்டபோது ஏதோ ஒரு காரணம் சொல்லி சமாளித்து வந்தனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த வாடிக்கையாளர்கள் ப்ரணவ் ஜுவல்லரி நகைக்கடைகளை முற்றுகையிட்டனர்.
பின்னர், போலீசாரின் அறிவுரையை ஏற்று பாதிக்கப்பட்டவா்கள் அந்தந்த மாவட்ட காவல்துறையிலும், பொருளாதார குற்றப்பிரிவிலும் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் அனைத்து நகை கடைகளையும் மூடி விட்டு அதன் உரிமையாளர்களான மதனும், அவரது மனைவி கார்த்திகாவும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் ஜுவல்லரி உரிமையாளரான மதன் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அவரது மனைவி கார்த்திகா, முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அவர் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தார்.
இந்நிலையில் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி லில்லிகிரேஸ் தலைமையிலான போலீசார் மதனின் மனைவி கார்த்திகாவை இன்று (டிச.14,2023) கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“