/indian-express-tamil/media/media_files/2025/08/14/whatsapp-image-2025-2025-08-14-12-46-22.jpeg)
Trichy
திருச்சி மாவட்டம் கிளிகூடு, உத்தமர்சீலி, பனையபுரம், திருவரசோலை போன்ற பகுதிகளில் காட்டுப் பன்றிகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இப்பகுதிகளில் நெல், வாழை, கரும்பு போன்ற பயிர்கள் காட்டுப் பன்றிகளால் தொடர்ந்து சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பிரச்சினை குறித்து விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் வனத்துறை மற்றும் அரசு தரப்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
காட்டுப் பன்றியின் கொடூரத் தாக்குதல்
கடந்த 11-ம் தேதி, கவுத்தரசநல்லூர் பகுதியில் உள்ள ஒரு கொய்யாத் தோப்புக்குள் நுழைந்த காட்டுப் பன்றி, அங்கு பணியில் இருந்த விவசாயி சகாதேவன் (45) என்பவரைத் தாக்கியது. பன்றியின் கொடூரமான தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதே நாளில் மாலை, உத்தமர்சீலியைச் சேர்ந்தவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட விவசாய அணி முன்னாள் தலைவருமான கணபதி (70) என்பவர் தனது வாழைத் தோப்புக்குச் சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக அங்கு வந்த ஒரு காட்டுப் பன்றி அவரையும் கடுமையாகத் தாக்கி காயப்படுத்தியது.
உயிரிழந்த விவசாயி
தாக்குதலில் பலத்த காயமடைந்த கணபதி உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நம்பர்-1 டோல்கேட் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளர் பி.தர்மா பேசுகையில், "காட்டுப் பன்றிகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதன் விளைவாகத்தான், விவசாயி கணபதி உயிரிழந்தார். எனவே, காட்டுப் பன்றிகளின் தாக்குதலால் உயிரிழந்த கணபதியின் உடலை வாங்க மறுத்து, இன்று திருச்சி அரசு மருத்துவமனை முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளோம்," என்று தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us