திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் அருகே சாலையின் தடுப்பை கடக்கும்போது செண்ட்ர் மீடியனில் உள்ள மின் கம்பத்தை தொட்டதில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 41-வது வார்டு செயலாளர் தினேஷ் என்பவர், நேற்று (நவ 24) இரவு திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்கும்போது சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள மின்விளக்கு கம்பத்தை தொட்டதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
அவரது சடலத்தை மீட்ட போலீசார் உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில், பால்பண்ணை முதல் துவாக்குடி வரையில் உள்ள மின்விளக்குகளை முறையாக பராமரிப்பு செய்து மின்கசிவு இல்லை என்பதை உறுதி செய்திட வேண்டும், மின் விளக்குகள் பராமரிப்பு பணியை மேற்கொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
செய்தி - க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“